திருமங்கலம் : 'காங்கிரஸ் முதுபெரும் தலைவர் காமராஜருக்கு சமாதி கட்டியது நாங்கள் தான்' என பேசிய தி.மு.க., வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம்தாகூர் டிவிட்டரில் 'டுவீட்' செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டை மீறி தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பேசி வருகின்றனர்.சில நாட்களுக்கு முன்பு தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா பேசும்போது மனு தர்மத்தில் உள்ளதாக கூறி ஈ.வே.ராமசாமி பேசியதாக கூறி ஒரு கருத்தை ஹிந்து மக்களுக்கு எதிராக தெரிவித்தார். இதை கண்டித்து தமிழக முழுவதும் பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்னை முடிவதற்குள் தி.மு.க.,வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காமராஜரை பற்றி ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் "நம்மை அழிக்க நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என அனைவருக்கும் தெரியும். காமராஜர் தி.மு.க.,காரனின் கட்டைவிரலை வெட்டுவேன் என்றார். ஆனால் அவருக்கு கல்லறை கட்டியது நாம் தான்" என பேசியுள்ளார்.
இந்த வீடியோவை டுவிட்டரில் பதிவு செய்த தி.மு.க., வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் "காமராஜரை இழிவுபடுத்திய, அநாகரிகமான பொய்யான பேச்சு பேசிய ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்'' என டுவீட் செய்துள்ளார்.