நத்தக்காடையூர் அருகே, எல்.பி.பி., கிளைவாய்க்கால் பகுதியில் பொதுப்பணித்
துறைக்கு சொந்தமான, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடம், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து, தாசில்தார் ஆய்வு மேற்கொண்டனர்.
காங்கேயம் தாலுகா, குட்டப்பாளையம் கிராமம், நத்தக்காடையூர்-முத்துார் செல்லும் ரோட்டில், ஊஞ்சமரம் பஸ் ஸ்டாப் அருகே கீழ்பவானி பாசன திட்ட வாய்க்கால் செல்கிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமன இடத்தின் ஒரு பகுதியில், கடந்த, 25 ஆண்டுக்கு முன், 3 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து, 5 வணிக கடைகளுக்கான கட்டு
மானத்தை எழுப்பியுள்ளனர். ஆக்கிரமிப்பு பகுதி அருகே, மாவட்ட நொடுஞ்சாலை செல்வதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து, தன்னார்வலர்கள் புகார் மனு அளித்தனர். ஆக்கிரமிப்பாளர் அரசியல் பலம் மிக்கவர் என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கடந்த வாரம், ஆக்கிரமிப்பு கடைகளில் மராமத்துப்பணிகள் நடந்தன. இதுகுறித்து, தாசில்தாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, துணை தாசில்தார் மோகனன், நத்தக்காடையூர் ஆர்.ஐ., செல்வி, கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் நேரில் சென்று, பணியை தடுத்து நிறுத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு கடையின் மேற்கூரை மட்டும் அகற்றப்பட்டது. ஆனால் கட்டுமானம் இன்னும் அகற்றாமல் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதுகுறித்து, காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி கூறுகையில், ''ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை, சம்பந்தப்பட்டவர்களிடம் அகற்றி கொள்ளவேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.