பி.எப்.ஐ., விவகாரத்தால், ஆத்துாரில் மாவட்ட எல்லைகள் உள்பட, 7 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதாக புகார் எழுந்ததால், அதன் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்துார் சப்-டிவிஷனில் நேற்று, ஆத்துார் டவுன், செல்லியம்பாளையம், தலைவாசல், வீரகனுார், தம்மம்பட்டி, மல்லியக்கரை, கெங்கவல்லி ஆகிய இடங்களில், டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், துப்பாக்கி ஏந்திய நிலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், நாமக்கல், திருச்சி மாவட்ட எல்லை பகுதிகளில் துப்பாக்கிகளுடன் இன்ஸ்பெக்டர்கள், வாகனங்களை பரிசோதனைக்கு பின் அனுமதித்தனர். மொபட், பைக், கார், வேன்களில் தனியாக பெட்ரோல், ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் எடுத்துச் செல்கின்றனரா என கண்காணித்தனர். வாகன சோதனை குறித்த பணிகளை, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், கூடுதல் எஸ்.பி., செல்லபாண்டியன் பார்வையிட்டனர்.