வாகனங்களுக்கு ஒளிரும் பட்டை ஒட்டும் விவகாரத்தில், கமிஷனர் உத்தரவை அமல்படுத்த மறுக்கும், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட சரக்கு போக்குவரத்தாளர் நலச்சங்க மகாசபை கூட்டம், மரவனேரியில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற, மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தனராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
வாகன தகுதி சான்றிதழ் புதுப்பிக்க, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, பழைய ஒளிரும் பட்டை நல்ல நிலையில் இருந்தால் அனுமதித்து சான்றிதழ் வழங்க, தமிழக போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், கோவை, மேட்டுப்பாளையம், கும்பகோணம் உள்ளிட்ட சில வட்டார போக்குவரத்து அலுவலர்கள், புது ஒளிரும் பட்டை ஒட்டினால் மட்டும் தகுதி சான்றிதழ் வழங்க முடியும் என தெரிவிக்கின்றனர். கமிஷனரின் உத்தரவை அமல்படுத்த மறுக்கும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும்.
மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் அறிவித்தபடி, 60 கி.மீ.,க்குள் உள்ள சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற வேண்டும். டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.