புதுடில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பின்வாங்கியுள்ள நிலையில், காங்., மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் நாளை (செப்.,30) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்., 17ல் நடக்கிறது. கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கட்சித் தலைவர் பதவியோடு, ராஜஸ்தான் முதல்வர் பதவியையும் வகிக்க திட்டமிட்டு, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை துாண்டி விட்டு அவர் நடத்திய நாடகம், சோனியாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அசோக் கெலாட் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சோனியா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரும், கட்சியின் மூத்த தலைவருமான திக் விஜய் சிங், கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், ராகுலுடன் கேரளாவில் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றுள்ள திக் விஜய் சிங், இன்று (செப்.,29) டில்லி சென்றுள்ளார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‛காங்., தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இதற்காக இன்று வேட்புமனுவை பெற்றுக்கொண்டு நாளை தாக்கல் செய்ய உள்ளேன்' என்றார். ஏற்கனவே, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் மேலிட ஆதரவு இல்லாமலேயே, போட்டியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், காங்கிரசில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
சசிதரூர் - திக் விஜய் சந்திப்பு

தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள திக் விஜய் சிங் மற்றும் சசிதரூர் சந்தித்து பேசியுள்ளனர். போட்டியாளர்கள் இருவரும் சந்தித்திருப்பதால் காங்.,கில் அடுத்த ‛திக் திக்' ஏற்பட்டது. இது குறித்து சசிதரூர் கூறுகையில், ‛காங்கிரஸ் தலைவர் பதவிக்கான அவரது (திக் விஜய் சிங்) வேட்புமனுவை நான் வரவேற்கிறேன். இது எங்கள் இருவருக்கு இடையிலான போட்டியல்ல, நட்பு ரீதியான போட்டி என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். யார் வெற்றிப்பெற்றாலும், காங்., வெல்லும்' என்றார்.