ஓய்வுபெற்றவர்கள் மற்றும் ஓய்வுபெற உள்ளவர்களுக்கு இருக்கும் பெரிய கவலை, வேலையை விட்ட பின்னர் நிலையான வருமானம் ஈட்டுவது எப்படி என்பது தான். ஓய்வுபெறும் சமயத்தில் பி.எப்., கிராஜுவிட்டி, தேசிய பென்ஷன் திட்டங்கள் போன்ற முதிர்வுத் தொகைகள் மொத்தமாக கிடைக்கும். இதனை எந்த வகையில் எல்லாம் பாதுகாப்பாக முதலீடு செய்து வருமானம் பெறுவது என அறிந்துகொள்வோம்.
ஓய்வூதியப் பலன்கள் இரண்டு இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒன்று வழக்கமான வருமானத்தை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது அடுத்த 20 முதல் 30 ஆண்டுகள் அந்தப் பண மதிப்பு சரியாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்போது தான் அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க முடியும்.
![]()
|
இதனை 2 விதமாக அடையலாம். வழக்கமான செலவுகளுக்கு எவ்வளவு வருமானம் தேவை என்பதை முடிவு செய்துகொண்டு, அரசு சார்ந்த நிலையான வருமானம் தரக் கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையின் கீழ் வரும் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்! (SCSS)
![]()
|
அரசு ஆதரவு பெற்ற உத்தரவாதமான சேமிப்புத் திட்டம் இது. தற்போது 7.4% வட்டி ஒவ்வொரு காலாண்டும் வழங்கப்படுகிறது. ஓய்வுக்குப் பின்னர் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.1,10,000 கிடைக்கும். உங்கள் மனைவியும் மூத்த குடிமக்கள் எனில் அவர் பெயரில் முதலீடு செய்யும் பணத்திற்கு மேலும் ரூ.1.1 லட்சம் என ஆண்டுக்கு ரூ.2.2 லட்சம் கிடைக்கும்.
பிரதம மந்திரி வாய வந்தனா திட்டம் (PMVVY)
![]()
|
இதில் மூத்த குடிமக்கள் தலா ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதற்கான வட்டி 7.4%. மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதி என எப்படி வேண்டுமானாலும் வட்டியைப் பெறலாம். இதில் கணவன் மனைவி இணைந்து ரூ.30 லட்சம் மூதலீடு செய்தால், ரூ.2.2 லட்சம் கிடைக்கும். முந்தைய திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ரூ.30 லட்சம் மற்றும் இதில் ரூ.30 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், ஆண்டு வருமானமாக ரூ.4.4 லட்சம் கிடைக்கும். மாதாந்திர அடிப்படையில் பார்த்தால் ரூ.36,600 வரும்.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
மூன்றாவது பிரபலமான திட்டம் இது. ஆனால் மேற்கூறிய 2 திட்டங்களை விட வட்டிக் குறைவு. வங்கி வைப்புத் தொகையுடன் ஒப்பிடும் போது சற்றே அதிகம். 6.6 சதவீத வட்டி கிடைக்கும். இதில் ஒருவர் ரூ.4.5 லட்சம் தான் அதிகபட்சம் டெபாசிட் செய்ய முடியும். கணவன், மனைவி இணைந்து ரூ.9 லட்சம் டெபாசிட் செய்தால் அதன் மூலம் தனியாக ரூ.60 ஆயிரம் ஆண்டு வருமானம் பெறலாம்.
இதன் படி மொத்த டெபாசிட்டான ரூ.69 லட்சம் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் பெறலாம். மாதாந்திர வகையில் பார்த்தால் ரூ.41,500 வரும். ரூ.69 லட்சத்துக்கு வீட்டை கட்டி வாடகை விட்டால் கூட இந்த வருமானம் பார்க்க முடியாது. அதே சமயம் லிக்விட் பணமாக இருப்பதால், பிள்ளைகள் கேட்கிறார்கள் என எடுத்து செலவு செய்துவிடவும் வாய்ப்புகள் அதிகம். நிதியில் ஒழுங்கை கடைப்பிடிப்பவர்களுக்கு தான் இந்த டெபாசிட்டுகள் சரிவரும்.