திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகளில் உள்ள நலிந்த மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆற்காடுகுப்பத்தில் நடந்தது.
திருத்தணி வருவாய்த் துறையினர் சார்பில் மக்கள் தொடர்பு திட்டம் வாயிலாக ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 280 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர், விதவை உதவித்தொகை, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை என மொத்தம், 17 லட்சத்து 2,800 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் வழங்கினார்.இதில், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கலைச்செல்வி, திருத்தணி தாசில்தார் வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர்.