கோவை:சுசி ஈமு நிதி நிறுவனம் மோசடி வழக்கில், தண்டனை பெற்ற குருசாமி, கோர்ட்டில் சரண்அடைந்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சக்தி நகரை சேர்ந்தவர் குருசாமி, 40. 'சுசி ஈமு பார்ம் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நிறுவனத்தில், 96 பேரிடம், 2.39 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தார். வழக்கில், கோவை 'டான்பிட்' கோர்ட்டில், குருசாமிக்கு 2021ல் 10 ஆண்டு சிறை, 2.40 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதே போல, சேலத்தில் ஈமு நிதி நிறுவனம் நடத்தி, மோசடி செய்த வழக்கிலும், கடந்தாண்டில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இந்த இரண்டு வழக்கில், கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்பட்ட போது, குருசாமி கோர்ட்டில் ஆஜராகததால் அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த குருசாமியை, நாமக்கல் மற்றும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோவை 'டான்பிட்' கோர்ட்டில் குருசாமி நேற்று முன்தினம் சரணடைந்தார். நீதிபதி ரவி உத்தரவின் படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.