ஸ்ரீவில்லிபுத்துார்:சிவகாசியில் குடிக்க பணம் தர மறுத்த தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.என். புரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சல பாண்டியன், 37; கூலித் தொழிலாளி. மனைவியை பிரிந்து தாய் ஈஸ்வரியுடன் வசித்து வந்தார். 2019 பிப்., 21 இரவு குடிக்க பணம் தராததால், ஈஸ்வரியை பிளாஸ்டிக் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.திருத்தங்கல் போலீசார் அருணாச்சல பாண்டியனை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அருணாச்சல பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.
தஞ்சாவூர்:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம், 30 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
சிவகங்கை மாவட்டம், குலத்துவேல்பட்டியை சேர்ந்தவர் முத்து, 31; 'டைல்ஸ்' பதிக்கும் தொழிலாளி. கடந்த 2020ம் ஆண்டு, பேராவூரணியில் டைல்ஸ் பதிக்கும் தொழிலுக்காக வந்திருந்தார்.அப்போது பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை பாலியல் பாலத்காரம் செய்தார். சோர்வாக இருந்த சிறுமியிடம், பெற்றோர் விசாரித்த போது, முத்து அவரை பாலியல் பாலத்காரம் செய்தது தெரிந்தது.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி பேராவூரணி போலீசார், முத்துவை கைது செய்தனர். தஞ்சாவூர் 'போக்சோ' சட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த அந்த வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.முத்துவுக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டார்.
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஆனைகுட்டம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெரியசாமியை 77, கழுத்தை நெரித்து கொன்ற சுமனுக்கு 35, விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
கடந்த 2017ல் ஆனைகுட்டம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்த சுமன் மதுபோதையில் அப்பகுதி பெரியசாமி என்பவரின் 2,000 ரூபாயை பறித்து அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.ஆமத்துார் போலீசார் சுமனை கைது செய்து விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிபதி ஹேமந்த் குமார், கொலை செய்த சுமனுக்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் கட்டத் தவறினால், ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கோவை:வாலிபரை அடித்து கொன்ற வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் சிறை விதித்து, கோவை தனிக் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, தடாகம் ரோடு, இடையர் பாளையம், சிவாஜி காலனியை சேர்ந்தவர் ஜெயகுமார், 25. ஆனைகட்டியில் தங்கியிருந்து செங்கல் பாரம் ஏற்றும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.இவருடன், அதே பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி, 53 என்பவரும் பணிபுரிந்து வந்தார். கடந்தாண்டு, மார்ச்., 1ல், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி, ஜெயகுமாரை கட்டையால் அடித்து கொலை செய்தார். தடாகம் போலீசார் வழக்கு பதிந்து, வெள்ளிங்கிரியை கைது செய்தனர். அவர் மீது, கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப் பட்ட வெள்ளிங்கிரிக்கு ஆயுள் சிறை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.