''உளவுத்துறையின் 'மாஜி' அதிகாரியை உதவியாளரா நியமிச்சி இருக்காங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.
''யாரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழக கவர்னர் ரவி, தி.மு.க., அரசுக்கு சிம்ம சொப்பனமா இருக்காரே... கவர்னர் மாளிகையில, பெரும்பாலும், மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தான் பணியில இருக்காங்க..
.''இந்த சூழல்ல, மத்திய உளவுத்துறையில உதவி இயக்குனரா பணிபுரிந்து ஓய்வு பெற்ற கல்யாண ராமனை, சமீபத்துல தனக்கு உதவியாளரா கவர்னர் நியமிச்சிருக்கார்... இவரும், தன் பழைய, 'சோர்ஸ்'கள் மூலமா, தமிழக அரசு தொடர்பான பல தகவல்களை திரட்டி, கவர்னருக்கு குடுத்துட்டு இருக்காருங்க..
.''எந்த விஷயத்தையும், கவர்னரும், கல்யாண ராமனும் மட்டுமே கலந்து பேசி முடிவு எடுக்கிறதால, கவர்னர் மாளிகை ரகசியங்கள் எதுவும் மற்ற அதிகாரிகளுக்கு தெரிய மாட்டேங்குதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''பஸ்சை பறிமுதல் பண்ணிட்டாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.''ஏதாவது ஜப்தி நடவடிக்கையாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''இல்லை... கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி புறவழிச்சாலை சோதனைச்சாவடியில, அதிகாரிகள் ஆசியோட புரோக்கர்கள் ஆதிக்கம் செலுத்திட்டு இருக்காங்க பா...
''போன வாரம், தனியார் ஆம்னி பஸ்சுக்கு வரி கட்ட டிரைவர், கிளீனர் போனப்ப, ரோட்டுல இருந்த சில புரோக்கர்கள், 'எங்களிடம் பணத்தை குடுங்க... உள்ளே போய் மோட்டார் வாகன ஆய்வாளரை சந்திக்க வேண்டாம்'னு தடுத்திருக்காங்க பா...
''அதை கண்டுக்காம, மோட்டார் வாகன ஆய்வாளரை பார்க்க டிரைவரும், கிளீனரும் போயிட்டாங்க... உள்ள இருந்த பெண் அதிகாரியிடம், 'புரோக்கர்கள் வழியிலயே மறிக்கிறாங்க'ன்னு புகார் சொல்ல, பெண் அதிகாரி, 'டென்ஷன்' ஆயிட்டாங்க பா..
.''என் ஊழியரை எப்படி புரோக்கர்னு சொல்லலாம்னு கேட்டு, வரி கட்டலைன்னு சொல்லி, பஸ்சை அதிரடியா பறிமுதல் பண்ணிட்டாங்க... இதுதான், திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''வாங்க தம்பி... 'சரஸ்வதி' பூஜைக்கு ஊருக்கு போறேளா...'' என, பெஞ்சுக்கு வந்த வாலிபரிடம் விசாரித்த குப்பண்ணாவே, ''தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை பலவந்தமா பிடிக்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''அரசு போக்கு வரத்து கழகத்துல தி.மு.க.,வின் தொ.மு.ச., வுக்கு, 40 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தா... ஆட்சிக்கு வந்த பிறகு, இது, 60 ஆயிரமா உசந்துடுத்து ஓய்..
.''சமீபத்துல, போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு, 14வது ஊதிய ஒப்பந்தம் போட்டிருக்கா... 'இதை நாங்க தான் அரசிடம் பேசி வாங்கி தந்தோம்'னு தொ.மு.ச.,வினர் தம்பட்டம் அடிச்சுக்கறா ஓய்...''தொ.மு.ச.,வுக்கு சென்னையில தலைமை அலுவலகம் கட்டிண்டு இருக்கா... அதுக்கு, தொ.மு.ச., உறுப்பினர்கள், தங்களது ஒரு நாள் சம்பளத்தை நிதியா தரணும்னு கேட்டிருக்கா ஓய்...
''இது சம்பந்தமா, அந்தந்த டிப்போக்கள்ல நோட்டீஸ் ஒட்டியிருக்கா... டிப்போவுல இருக்கற தொ.மு.ச., நிர்வாகிகள், தொழிலாளர்களிடம் சம்பளத்தை பிடிக்கலாம்னு அனுமதி கடிதம் வாங்கிண்டு இருக்கா... 'பணம் தர மறுத்தா, பணி ஒதுக்கறதுல பிரச்னை வரும்'னு மிரட்டியே, அனுமதி கடிதங்களை வாங்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.