கூடலுார்: ''நம் நாட்டில் எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், கவர்னர்களின் தலையீடு அதிகரித்துள்ளது,'' என, காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார்.

கேரள மாநிலத்தில் நடைபயணம் நிறைவு செய்து, நேற்று, நீலகிரி மாவட்டம் கூடலுார் வந்த எம்.பி., ராகுலை, காங்., மாநில தலைவர் அழகிரி வரவேற்றார். கட்சி நிர்வாகிகள், தேயிலை விவசாய தொழிலாளர்கள், தன்னார்வலர்களை சந்தித்து பேசினார்.மாலை, 5:00 மணிக்கு கோழிப்பாலம் பகுதியில் இருந்து, 6 கி.மீ., பயணித்த ராகுல், கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு செய்தார்.
அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது :நம் நாட்டில், எதிர் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், கவர்னர்களின் தலையீடு அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்கும் பணியில் பா.ஜ.,- ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டுள்ளன.மத்திய அரசு, ஒரே மொழி; ஒரே பண்பாட்டை திணிக்கிறது. மத்திய அரசின் வெறுப்பு தன்மையால் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
நாட்டில் சிறு தொழில்கள் அதிகளவில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை களைய நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு, ராகுல் பேசினார். மாநில பொறுப்பாளர் குண்டுராவ், எம்.பி.,க்கள் ஜெயகுமார், ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர். மாநில செயலாளர் கோஷிபேபி நன்றி கூறினார். ராகுல், இன்று கர்நாடக மாநிலம் செல்கிறார்.

கூடலுாரில் நடந்த ராகுல் நடைபயணத்தால், நேற்று மாலை 4:30 மணி முதல், இரவு, 7:15 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழ கம்- கேரளா- கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. உள்ளூரில், பந்தலுார் தாலுகா உட்பட, 100 கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் திணறினர்.