போபால் :மத்திய பிரதேசத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை, 'தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்' என, பா.ஜ., அமைச்சர் மொபைல் போனில் மிரட்டிய, 'ஆடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, 'கடமையை செய்ய தவறும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில முதல்வர் சமீபத்தில் உத்தரவிட்டார். சமீபத்தில் அவர் ஒரு அரசு விழாவில் வைத்து சில அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்தார். இப்படி அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, முதல்வரின் உத்தரவுக்கு முரணான சம்பவம் ஒன்று அங்கு அரங்கேறி உள்ளது.
![]()
|
மாநில அமைச்சரவையில், பா.ஜ.,வைச் சேர்ந்த ராம்கேலாவன் படேல் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியுடன் பேசுவதாக கூறப்படும், 'ஆடியோ' சமீபத்தில் வெளியானது. அதில், 'என்னுடைய தொகுதியான அமர்பதானில் உள்ள கடைகளில் கலப்பட உணவு தொடர்பாக எவ்வித சோதனைகளும் நடத்தப்பட கூடாது. வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய கூடாது. மீறினால், உன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்' என அமைச்சர், அதிகாரியை மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தன் குரல் தானா, இல்லையா என்பது குறித்து அமைச்சர் ராம்கேலாவன் விளக்கம் அளிக்கவில்லை; மிரட்டப்பட்ட அதிகாரியும் இது குறித்து வாய் திறக்கவில்லை.