கோவை:கூலித்தொழிலாளியை கருங்கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.கோவை மாவட்டம் பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது தோட்டத்தில், தண்ணீர் தொட்டிக்கு கான்கிரீட் வளையம் போடும் வேலை நடந்து வந்தது. இதில், மதுரையை சேர்ந்த ஸ்ரீகண்டன், 32, சேர்வராயன் (எ) ஜெயராஜ், 42, மகுடீஸ்வரன் ஆகியோர் வேலை பார்த்தனர். சேர்வராயனும், மகுடீஸ்வரனும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தங்கியிருந்தனர். 2019ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மாலை 4:30 மணிக்கு, வேலை முடிந்ததும் மூவரும் சம்பளப்பணம் வாங்கினர். மகுடீஸ்வரன் ஊருக்கு கிளம்பினார். சேர்வராயனும், ஸ்ரீகண்டனும் சுல்தான்பேட்டைக்கு சென்று மது குடித்து விட்டு வந்தனர். சேர்வராயன், தன் எப்.எம்.ரேடியோவில் அதிக ஒலியுடன் பாடலை ஒலிக்கச் செய்தார். துாக்கம் கெடுவதாக எரிச்சல் அடைந்த ஸ்ரீகண்டன், கூச்சல் போட்டார்.இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஸ்ரீகண்டன், இரும்புக்கம்பியால் ரேடியோவை அடித்து உடைத்தார். தடுக்க முயற்சித்த சேர்வராயனையும் கம்பியால் தாக்கினார். அதில் அவரது முன் பல் உடைந்தது.பதிலுக்கு சேர்வராயன், கருங்கல்லால் தாக்கி கீழே தள்ளினார். மீண்டும் கல்லால் தாக்கியதில் ஸ்ரீகண்டன் பலியானார்.இந்த வழக்கு, கோவை குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட ஜெயராஜ் (எ) சேர்வராயனுக்கு, ஆயுள் தண்டனையும், 2500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.