சென்னை:நெல் கொள்முதலில் முறைகேடுகளை தடுக்க, மாவட்ட வாரியாக சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இம்மாதம் 1ல் துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசன், 2023 செப்., 30ல் முடிகிறது. இதற்காக தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.அங்கு, விவசாயிகளிடம் கமிஷன் வாங்குவது உள்ளிட்ட முறைகேட்டை தடுக்கவும், நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரிசி ஆலைகள் மற்றும் கிடங்களுக்கு அனுப்பும் பணியை கண்காணிக்கவும், மாவட்ட வாரியாக சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து, கூட்டுறவு துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், கடலுார், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின், சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டைக்கு வாணிபக் கழக மேலாண் இயக்குனர் பிரபாகர்; அரியலுார், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூருக்கு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனர் சிவஞானம்; திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு வாணிப கழக இணை மேலாண் இயக்குனர் கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரிக்கு கூட்டுறவு சங்க நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளர் சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.