தஞ்சாவூர் : ''ஓசி பஸ் என பெண்களைக் கூறும் அமைச்சர் பொன்முடி, பெண் வயிற்றில் 'ஓசி'யில் பிறந்தவர் தான்,'' என, நடிகை கஸ்துாரி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்த நடிகை கஸ்துாரி, மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து மேயர் ராமநாதன், கமிஷனர் சரவணக்குமாரை சந்தித்து பாராட்டினர்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் நல்ல திட்டம். அரசு, எந்த திட்டத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் நிறைவேற்றி வருகிறது.மக்களுக்கு ஒரு திட்டத்தைச் செய்து விட்டு, அதை சுட்டிக்காட்டுவது மிக பெரிய தவறு. 'ஓசி பஸ்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது, அதை விட பெரிய தவறு.
அமைச்சர் பொன்முடி, அப்படி பேசியதை நியாயப்படுத்த முடியாது.'ஓசி பஸ்' என பெண்களை கூறும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் அனைத்து ஆண்களும், பெண் வயிற்றில், 'ஓசி'யில் பிறந்தவர்கள் தான்.பெண்களுக்கான மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தான், அமைச்சர்கள் பேச வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.