வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் ரகசிய திட்டங்களை அறிந்து கொள்ளவே, அவரது உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகனை, போலீசார் கைது செய்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின், தி.மு.க.,வை எதிர்த்து, தீவிர அரசியல் செய்வதில் முனைப்புடன் உள்ளார். இதற்கு முன் தமிழக பா.ஜ., தலைவராக இருந்தவர்கள், இந்த விஷயத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதை அறிந்த கட்சி மேலிட தலைவர்கள், தொடர்ந்து அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
நெருக்கடி
தி.மு.க., மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து, தினமும் அண்ணாமலை அளிக்கும் பேட்டி, அவர் வெளியிடும் ஆதாரங்கள், மக்களிடம் வேகமாக சென்று சேருகின்றன. இது, தி.மு.க., தலைவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. எனவே, அண்ணாமலை செயல்பாடுகளை மொத்தமாக முடக்க வேண்டும் என, பல வகைகளிலும் முயற்சி எடுத்து வருகின்றனர். தி.மு.க., துணை பொதுச் செயலர் ஆ.ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் போராட்டம் நடத்திய, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விளாசல்
அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலேயே, அவர் மீது இப்படியொரு வழக்கு போடப்பட்டுள்ளது.மேலும், தமிழக அரசு மற்றும் தி.மு.க.,வுக்கு எதிரான ஆவணங்கள், ஆதாரங்களை தினமும் சேகரித்து கொடுக்கும் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் மீதும், தமிழக போலீஸ் கை வைத்துள்ளது. கிருஷ்ணகுமார் சேகரித்து கொடுக்கும் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து தான், அண்ணாமலை, அரசையும், தி.மு.க.,வையும் விளாசி வருகிறார்.
கிருஷ்ணகுமாரை கைது செய்து விட்டால், அண்ணாமலை புள்ளி விபரங்கள் இல்லாமல் தடுமாறுவார். தி.மு.க.,வையும், அரசையும் எதிர்த்து பேசுவதை குறைத்து கொள்வார் என, அதிகாரிகள் சிலர் யோசனை கூறி உள்ளனர். அத்துடன் கிருஷ்ணகுமாரை கைது செய்து, அவர் வாயிலாக, அண்ணாமலையின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் எதிர்கால ரகசிய திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம் எனவும், முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்தே, கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
![]()
|
வழக்கு பதிவு
கிருஷ்ணகுமார் மீதான குற்றச்சாட்டு சாதாரணமானது. முதல்வருக்கு அவதுாறு ஏற்படுத்த, 'போஸ்டர்' அச்சிட்டு ஒட்டினார் என்பது தான் குற்றச்சாட்டு. இதற்கு அவதுாறு வழக்கு தான் போட்டிருக்க முடியும். அவதுாறு வழக்கு போட்டால், கைது செய்ய வாய்ப்பில்லை என்பதால், கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இதனாலேயே, அவருக்கு ஜாமின் கிடைப்பது தாமதமானது. தற்போது, அவர் ஜாமினில் வெளியே வந்து விட்டார்.
பறிமுதல்
போலீசார், கிருஷ்ணகுமாரை கைது செய்த உடனே, அவரிடம் இருந்த மொபைல் போனை தான் பறிமுதல் செய்தனர். அந்த மொபைல் போனில் தான், அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து, அத்தனை விபரங்களையும் கிருஷ்ணகுமார் சேகரித்து வைத்திருந்தார். அதன் வாயிலாக, அண்ணாமலை - - கிருஷ்ணகுமார் பேச்சு விபரங்கள் குறித்து ஆய்வு செய்ததாக தகவல். இதையடுத்து, தமிழக அரசு மற்றும் தி.மு.க., மீது அண்ணாமலைக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
ஏற்கனவே, போட்ட திட்டங்களை அப்படியே விட்டு விட்டு, புது திட்டம் வாயிலாக குடைச்சல் கொடுக்க முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறார். தி.மு.க., குறித்து ஈ.வெ.ரா., கூறிய விஷயங்களை வெளிப்படுத்தி, அரசுக்கு கூடுதல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அண்ணாமலையை முடக்க, அவர்கள் போட்ட திட்டம் 'பணால்' ஆகி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -