கோவை: 'கூட்ட நெரிசலை தவிர்க்க, எர்ணாகுளம் - சென்னை எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்டநெரிசல் தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ஒரு பகுதியாக, எர்ணாகுளம் - சென்னை எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம் இடையே (வண்டி எண்: 06046) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 20ம் தேதி இரவு 9:00 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 9:20 மணிக்கு சென்னை அடையும்.

அதேபோல், இன்றும், வரும், 21ம் தேதியும், சென்னை எம்.ஜி.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 3:10க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06045) மறுநாள் காலை 3:20க்கு எர்ணாகுளம் சென்றடையும்.ரயில், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
இதேபோல், திருவனந்தபுரம் - டாடா நகர் இடையே (06192) சிறப்பு ரயில், நாளை மற்றும் வரும் 8ம் தேதி இயக்கப்பட உள்ளது.ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து நள்ளிரவு, 2:30க்கு புறப்படும். இதேபோல், மறுமார்க்கத்தில், டாடா நகர் - திருவனந்தபுரம் இடையே (06191) சிறப்பு ரயில், வரும், 4 மற்றும் 11ம் தேதிகளில் காலை 5:15க்கு புறப்படும். சிறப்பு ரயில்கள், போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பூர், விஜயவாடா, ரூர்கோலா ஆகிய ஸ்டேஷன்கள் வழியாக செல்லும்.