வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஞ்சிபுரம்: சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் 4,700 ஏக்கர் பரப்பளவில், பசுமை விமான நிலையமாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைவதற்கு, அங்குள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஏகனாபுரம் கிராமத்திலேயே, 50 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, விமானம் நிலையம் அமையும் பகுதியில் உள்ள நீர்நிலைகள், குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், விவசாய நிலங்கள் என, அனைத்து கணக்கெடுப்பு பணிகளையும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
விமான நிலையம் அமையும் பகுதிக்குள் உள்ள நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் என, ஏற்கனவே அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.அதன்படி, விமான நிலையம் அமையும் பகுதிக்குள் உள்ள, பல்லவர்கள் வெட்டிய, 1,200 ஆண்டுகள் பழமையான கம்ப கால்வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
85 ஏரிகள்
அந்த கால்வாயை நம்பி, மொத்தம் 85 ஏரிகள் உள்ளன. பருவமழை காலத்தில், கம்ப கால்வாய் மூலமே ஏரிகள் நிரம்புவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வேலுார் மாவட்டத்திலுள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து, சற்று துாரத்தில் கூன்மடை என்ற பகுதியில், இரு கால்வாய்கள் பிரிகின்றன.
ஒன்று, காவேரிப்பாக்கம் ஏரிக்கும், மற்றொன்று கோவிந்தவாடி கால்வாயாகவும் பிரிகிறது. கோவிந்தவாடி கால்வாய், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் பாய்ந்து, தைப்பாக்கம் என்ற இடத்தில் இரண்டாக பிரிகிறது.அவ்வாறு இரண்டாக பிரியும் இடத்தில், கம்ப கால்வாய் துவங்குகிறது. கோவிந்தவாடி கால்வாய், வேலுார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப, திருமால்பூர் வழியாக செல்கிறது.
கம்ப கால்வாய், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களில் உள்ள ஏரிகளில் பாய்கிறது. ஆற்று நீர் பாயாத, இடங்களில் உள்ள ஏரிகளை நிரப்ப, 1,200 ஆண்டுகளுக்கு முன், பல்லவ மன்னர் காலத்தில் கம்ப கால்வாய் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கால்வாய், 44.36 கி.மீ., சென்று, கடைசியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது. காஞ்சிபுரம் தாலுகாவில், 55 ஏரிகளின் கீழுள்ள, 15 ஆயிரத்து, 105 ஏக்கர் விவசாய நிலங்களும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட, 30 ஏரிகளின் கீழுள்ள, 7,130 ஏக்கர் விவசாய நிலங்கள் என, மொத்தம் 22 ஆயிரத்து, 235 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இத்தனை பயனுள்ள கம்ப கால்வாய் மூலம், ஸ்ரீபெரும்புதுார் ஏரி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. விமான நிலையம் அமையும் பட்சத்தில் கம்ப கால்வாயில் தண்ணீர் செல்ல தடைபடும் என விவசாயிகள் அச்சமடைகின்றனர். பரந்துாரிலேயே கால்வாய் தடைபட்டால், மீதமுள்ள 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, விமான நிலையம் அமைந்தாலும், கம்ப கால்வாய்க்கு எந்த பாதிப்பும் இன்றி, அவற்றை பாதுகாக்க வேண்டும் என, விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
1,200 ஆண்டுகள் பழமை
கி.பி., 814 - 850ம் ஆண்டுகளில், தென் மாநிலங்களில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தை போக்க, ஆங்காங்கே குளம், கால்வாய்கள் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பாலாற்றில் இருந்து, பூதன் ஏரி - ஸ்ரீபெரும்புதுார் ஏரி , திருமங்கலம், மாம்பாக்கம் ஆகிய ஏரிகளை இணைக்கும் வகையிலான கால்வாயை, கம்ப வர்ம பல்லவன் வெட்டியதாக தெரிகிறது.
அவரால் வெட்டப்பட்ட அந்த கால்வாயை, 'கம்ப வர்ம கால்வாய்' என, மக்கள் அழைத்தனர். 1,592ல் அந்த கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு, அதன் கரைகளை உயர்த்தும் பணியை, விஜயநகர அரசர் வெங்கடபதிராயர் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, பிரிட்டிஷ்காரர்கள், இந்த கால்வாயை பராமரித்து வந்தனர். அந்த கால்வாயின் பெயர் மருவி, கம்ப கால்வாய் என தற்போது அழைக்கப்படுகிறது.