சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் குழந்தைகளா பெரியவர்களா?

Added : செப் 30, 2022 | |
Advertisement
"உனக்கு எதுவும் தெரியாது" என்று எங்கள் வீட்டில் அடக்கி வைக்கிறார்கள் என்று குறைபடாத இளைஞர்களே கிடையாது. இதற்கு பதிலாக, "பிள்ளைகள் சொல்வது சரி என்று ஏற்றுக்கொண்டால் அப்போது பெரியவர்கள் சொல்வது தவறாகிவிடுமா? பிள்ளைகளை கண்டித்து வளர்க்கக்கூடாதா?" என்கிற கேள்வி பெரியவர்களிடமிருந்து தோன்றுகிறது. இதற்கு தீர்வுதான் என்ன? விடையாய் விரிகிறது
வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் குழந்தைகளா பெரியவர்களா?

"உனக்கு எதுவும் தெரியாது" என்று எங்கள் வீட்டில் அடக்கி வைக்கிறார்கள் என்று குறைபடாத இளைஞர்களே கிடையாது. இதற்கு பதிலாக, "பிள்ளைகள் சொல்வது சரி என்று ஏற்றுக்கொண்டால் அப்போது பெரியவர்கள் சொல்வது தவறாகிவிடுமா? பிள்ளைகளை கண்டித்து வளர்க்கக்கூடாதா?" என்கிற கேள்வி பெரியவர்களிடமிருந்து தோன்றுகிறது. இதற்கு தீர்வுதான் என்ன? விடையாய் விரிகிறது இக்கட்டுரை...


சத்குரு:மனிதர்களில் மிகவும் உயிர்ப்புடன் இருக்கக் கூடியவர்களைத்தான் நாம் இளைஞர்கள் என்று குறிப்பிடுகிறோம். இதை முதிய தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும். நான் பார்த்தவரையில், இவ்வுலகம் இளைஞர்களால் வழிநடத்தப்பட்டால், நாம் வாழ்வதற்கு ஏற்ற அழகான இடமாக இது அமையும். ஏனென்றால், இளைஞர்கள் மிக உயர்ந்த சக்திநிலையில் உள்ள மனிதர்கள். மற்ற வயதில் உள்ள மனிதர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இளைஞர்கள் உயர்ந்த சக்திநிலையில் உள்ளனர்.

இளைஞர்களால் உலகில் ஆக்கப்பூர்வமாய் செயலாற்றக் கூடிய அதே வேளையில் அழிவிற்கு வித்திடும் செயல்களிலும் ஈடுபட முடியும், இல்லையா? ஏனென்றால், இவ்வுலகில் பிற மனிதர்களைக் காட்டிலும் அதிக உயிர்ப்புடன் இருப்பது இளைஞர்கள்தான். எனவே இளைஞர்களை நோயினை போல் கையாளாமல், மற்ற மனிதர்களைக் காட்டிலும் அவர்கள் உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
யாரோ சிலர் தங்களுக்குச் சரியென்று நினைப்பதை இளைஞர்களைச் செய்யத் தூண்டுவதற்கு மாறாக, இளைஞர்கள் வழிநடத்தினால் மிக அற்புதமாக இருக்கும். அவர்களின் சக்திநிலை தீவிரமாய் இருப்பதால், அவர்களுக்கு சரியான உத்வேகம் இல்லாமல், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வெகுசுலபமாக எதிர்மறையாய் மாறிவிடும். மற்றபடி, எல்லோரையும் விட வாழ்க்கைக்கு மிக அருகில் இருப்பவர்கள் நிச்சயமாக அவர்கள்தான்.

உண்மையில் இவ்வுலகம் குழந்தைகளால் வழிநடத்தப்பட்டால் மிக அற்புதமானதாக இருக்கும். ஏனெனில், பிற எல்லோரையும் விட வாழ்க்கைக்கு மிக அருகில் இருப்பவர்கள் அவர்கள்தான். இவ்வுலகில் நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும் அது மனிதகுல நலனிற்குத்தான். மனிதகுல நலன் என்பதன் பொருள், மனிதனின் மகிழ்ச்சிதான். உங்கள் குழந்தையையும் உங்களையும் பார்த்தால், நிச்சயமாக உங்களை விட உங்கள் குழந்தைகள்தான் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள், இல்லையா?

ஒருநாளின் 24 மணி நேரத்தை கவனித்துப் பார்த்தால், உங்களை விட அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடியும். இப்படிப்பட்ட நிலையில், வாழ்க்கைக்கு ஆலோசகராக இருக்க தகுதிவாய்ந்தவர் யார்? நீங்களா, உங்கள் குழந்தையா? நிச்சயமாக உங்கள் குழந்தைதான், இல்லையா? அவர்கள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக உள்ளனர். நீங்கள், எண்ணங்களாலும் உணர்வுகளாலும் சூழப்பட்டு வெகுதொலைவில் இருக்கிறீர்கள். உலகம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டால் அது அழகான இடமாக அமையும்.

இளைஞர்கள் நோயல்ல. பொதுவாக, இளைஞர்கள் சரிசெய்யப்பட வேண்டிய நோய் என்பது போலவும், அவர்களுக்கு சிகிச்சை தேவை என்பது போலவும் முதிய தலைமுறையினர் கையாள்கின்றனர். இளைஞர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. வாழ்க்கையை விட்டு வெகுதூரம் யார் விலகிச் சென்றிருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சிகிச்சை தேவை. யார் வாழ்க்கைக்கு மிக அருகில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், உயிர்ப்புடன் வாழ்வது மட்டுமே.

இன்றைய கல்விமுறை 100% செய்தியாகவே இருப்பது அதிலுள்ள பெரிய குறை. அதில் உத்வேகம் இல்லை. தூண்டுதலின்றி எந்த மனிதனும், தான் கட்டுண்டிருக்கும் எல்லையைக் கடப்பதில்லை. ஒரு மனிதன் தூண்டிவிடப் பட்டால் மட்டுமே, அவனால் தற்போதிருக்கும் எல்லைகளைக் கடந்துபோக இயலும். ஆனால், இன்றைய கல்விமுறை தூண்டுகோலாய் இல்லாமல் போய்விட்டது.

வெறும் செய்திகள் மட்டுமே வேண்டுமென்றால், வானொலி மூலமாகவோ தொலைக்காட்சி மூலமாகவோ இணையதளம் மூலமாக அல்லது வேறு எதன் மூலமாகவோ கற்றுக்கொள்ளலாம். இதற்காக ஒரு ஆசிரியரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வெறும் தகவல் பரிமாற்றமாய் கல்வியை அணுகினால், ஆசிரியரை விட இன்னும் சிறப்பான சாதனங்கள் உள்ளன. ஒரு புத்தகம் சிறந்தது, அதைவிட இணையதளம் இன்னும் சிறந்தது. ஒரு ஆசிரியரின் பங்கு மக்களுக்கு கற்றுக் கொள்வதற்கான ஆர்வத்தை ஊட்டுவதாக, அறிவுத் தாகத்தை எழுப்புவதாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஆசிரியரின் பங்கு அர்த்தமுள்ளதாக இருக்கும். வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே ஆசிரியர்கள் என்கிற கண்ணோட்டத்தில் இருந்தால், மனிதர்களைவிட பிற சாதனங்கள் சிறப்பானவை. மனிதர்களால் திரித்துக் கூற இயலும், சாதனங்கள் அதைச் செய்யாதே?

இளமையில் இருக்கும்போது, பலவித செயல்கள் செய்யும் திறமை பெற்றிருக்கும்போது, கல்வித்திட்டத்தை வெறும் தகவல்களுக்காக மட்டுமே வைத்திருப்பதால் அது ஏராளமான பாதிப்புகளை விளைவிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அது உங்கள் வாழ்நாட்களை விரயமாக்குகிறது. ஏனென்றால், போதிய அளவு தூண்டுதல் இல்லை.

தூண்டுதல் என்றால், பொதுவாக வெளியில் எதிரியை உருவாக்குவதன் மூலமே உலகிலுள்ள பெரும்பாலான தலைவர்கள் மக்களைத் தூண்டி விடுகிறார்கள். இதுதான் அவர்களது வழி. நீங்கள் வெளியில் ஒரு எதிரியை உருவாக்குவதால், தெருவில் போகும் அனைவரையும் உங்களால் தூண்டிவிட முடியும். ஏனெனில் இது செயல் பற்றியது, இல்லையா? ஆனால் உண்மையான எதிரி உங்களுக்குள் இருக்கிறான்.

உங்களை பாதிப்புக்குள்ளாக்கும் தடைகளே உங்கள் எதிரிகள். உங்கள் பயம், கவலை, கோபம், வெறுப்பு, நீங்கள் பாதிப்புறுகின்ற எந்தத் தடையாக இருந்தாலும், உண்மையான எதிரி உங்களுக்கு உள்ளேதான் இருக்கிறான் என்று மக்களுக்குச் சுட்டிக்காட்ட, அவர்களுக்கு எழுச்சியூட்ட பெரும் உறுதியும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. துரதிர்ஷடவசமாக, இந்த அர்ப்பணிப்புணர்வும் உறுதியும் மிக அரிதான பொருளாகப் போய்விட்டது.

ஒரு பெரிய விழா எடுத்து, எல்லா இளைஞர்களையும் உற்சாகப்படுத்தி, அவர்களை ஒரு அற்புதமான நிலைக்குக் கொண்டுவர நினைத்தால், அது ஒருபோதும் நிகழாது. தினசரி ரீதியில், உறுதியும் அர்ப்பணிப்பும் மிக்க செயல் தேவை. அது வாழ்க்கை முழுதும் தொடரும் ஒரு விஷயம். இன்று ஏதோவொன்றைச் செய்துவிட்டு, பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணாதீர்கள். அது சாத்தியமில்லை. அது ஒரு செடியை, ஒரு மரத்தினை வளர்ப்பது போன்றது.

பழம் வேண்டுமென்றால் தினமும் மரத்தினைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தண்ணீர்விட வேண்டும், ஒவ்வொரு நாளும் அதனை கவனிக்க வேண்டும். இந்த அர்ப்பணிப்பு, வயதில் மூத்தவர்களால் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டால், இளைஞர்கள் அதிசயமான செயல்கள் செய்வதைக் காண்பீர்கள். இந்தவொரு அர்ப்பணிப்பு உணர்வு மக்களிடம் இல்லாததால்தான், இளைஞர்கள் இலக்கற்றவர்களைப் போல் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. தங்களுக்குத் தெரிந்த சிறு சிறு விஷயங்களைச் செய்கிறார்கள். சிறிதோ பெரிதோ எல்லோருக்கும் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது. அதை நோக்கி உழைக்கிறார்கள். இளைஞர்களும் அப்படித்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X