சென்னை: இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களின் பட்டியலில், தாஜ்மகாலுக்கு முதல் இடம் எப்போதும் உண்டு. ஆனால், 2021 - 2022ம் ஆண்டில் தாஜ்மஹாலை விட, அதிகப்படியான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தமிழகத்தின் மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றுலாத் துறை சார்பில் புதுடில்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2022' என்ற, 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
2021-2022ம் ஆண்டில் மொத்தம் 30.29 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். அதை தொடர்ந்து, டில்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன.

அதேவேளையில், மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி மைய தககவல்படி, 2021-2022ம் ஆண்டு, இந்தியாவில் சுற்றுலா பயணம் செய்த வெளிநாட்டினர் 1,44,984 பேர் மகாபலிபுரத்தையும், 38,922 பேர் தாஜ்மகாலுக்கும் வருகை புரிந்துள்ளனர்.
குறிப்பாக, தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம், புலி குகை, செஞ்சி கோட்டை, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருக்கும் கோட்டை அருங்காட்சியகம், சித்தன்னவாசல் குகை ஓவியங்களை காண வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 45.5 சதவீத வெளிநாடு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு வரும் நிலையில் , 12.21 சதவீதம் மட்டுமே தாஜ்மஹாலுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, தெற்காசியாவில் இருந்து வரும் பயணிகள் சென்னைக்கு அதிகம் வருவதால் இந்த கணக்கீடு உயர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தாஜ்மஹாகாலுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டு பயணிகளின் வருகையே அதிகம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் இவ்விரண்டு நாடுகளிலிருந்தும் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தாஜ்மஹாலுக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.