சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

நல்ல பெற்றோராக இருக்க விருப்பமா... இதைப் படியுங்கள்!

Added : செப் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கேள்வி: ஒரு நல்ல பெற்றோராக இருப்பது என்றால் என்ன பொருள்? குழந்தைகளின் வளர்ச்சியில் நமது ஈடுபாடு எப்படி இருக்கவேண்டும்?சத்குரு: ஒரு குழந்தை பிறந்துவிட்டால், பெரியவர்கள் அனைவரும், தாங்கள் ஆசிரியராக மாறும் காலம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். உங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரும்பொழுது, அது, நீங்கள் ஆசிரியர் ஆகும் நேரம் அல்ல, நீங்கள்
நல்ல பெற்றோராக இருக்க விருப்பமா... இதைப் படியுங்கள்!

கேள்வி: ஒரு நல்ல பெற்றோராக இருப்பது என்றால் என்ன பொருள்? குழந்தைகளின் வளர்ச்சியில் நமது ஈடுபாடு எப்படி இருக்கவேண்டும்?சத்குரு: ஒரு குழந்தை பிறந்துவிட்டால், பெரியவர்கள் அனைவரும், தாங்கள் ஆசிரியராக மாறும் காலம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். உங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரும்பொழுது, அது, நீங்கள் ஆசிரியர் ஆகும் நேரம் அல்ல, நீங்கள் கற்றுக்கொள்வதற்கான நேரம். ஏனென்றால், உங்களையும் உங்கள் குழந்தையையும் பார்த்தால், இதில் யார் அதிகமான ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்? உங்கள் குழந்தைதான், இல்லையா? எனவே அவனிடமிருந்து நீங்கள் வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கான நேரம் இது. உங்களிடமிருந்து அவன் கற்றுக்கொள்வதற்கான நேரம் அல்ல. நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரக்கூடிய ஒரே விஷயம், பிழைத்தலுக்கான சில உபாயங்கள் - வாழ்க்கை நெருக்கடிகளில் இருந்து எப்படி தப்பிப்பது, எப்படி ஓரளவுக்கு பணம் சம்பாதிப்பது போன்றவைதான். ஆனால் உயிரோட்டமாய் வாழ்வது என்று வரும்போது, அதை ஒரு குழந்தை உங்களைவிட அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறது.

அவன் இயல்பே உயிரோட்டம்தான். உங்களைப் பொறுத்த வரையிலும் கூட, உங்கள் மனதின் மீது நீங்கள் சுமத்தியிருக்கும் உங்கள் தாக்கங்களை விலக்கிக் கொண்டால், எப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் உயிர்சக்திகளுக்குத் தெரியும். உங்கள் மனதிற்குத் தான் எப்படி இருப்பது என்று தெரியவில்லை. இந்த நிலையில், ஏற்கெனவே குழம்பிப்போய் துயரம் மற்றும் பல பாதிப்பு நிலைகளில் இருக்கின்ற உங்கள் மனதை, புதிதாய்ப் பிறந்திருக்கும் உங்கள் குழந்தை மீது சுமத்த நினைக்கிறீர்கள். ஒவ்வொருவரும் இங்கே துயரத்தில் இருப்பதாக நான் கூறவில்லை. ஆனால் எல்லாவிதமான துன்பங்களையும் கற்பனையாகவே உருவாக்கிக் கொள்வதில் நீங்கள் வல்லவர்கள்.

இது கற்றுக்கொள்வதற்கான நேரம், கற்றுத் தருவதற்கானது அல்ல. உங்களால் செய்ய முடிந்த ஒரே விஷயம், குழந்தை வளர்வதற்கான அன்பான சூழல், கவனிப்பு மற்றும் பக்கபலமாக இருப்பது மட்டும்தான். நல்லபடியாக வளர்ப்பது என்றால், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதல்ல; நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நல்ல சூழலை அவர்களுக்கு உருவாக்கித் தருவது மட்டுமே. உங்களுடைய தோட்டத்தை வளர்ப்பதற்கு தினம்தினம் நீங்கள் அங்கே சென்று உட்கார்ந்துகொண்டு இன்னும் மலரே வராத செடியிலிருந்து மலர்களையோ அல்லது பழங்களையோ பறித்தெடுக்க முயற்சிப்பது கிடையாது. தோட்டத்திற்குத் தேவையான சூழலை மட்டுமே உருவாக்குகிறீர்கள், அப்போது மலர்களும், பழங்களும் தானாக வருகின்றன. எனவே நீங்கள் சூழலை மட்டும் நன்கு பராமரித்தாலே குழந்தை நன்றாக வளர்கிறது. உங்களால் செய்யக்கூடியது அதுதான், அது மட்டுமல்ல செய்யப்பட வேண்டியதும் அதுதான்.

தங்களது குழந்தைகள் மேல் உண்மையிலேயே பெற்றோருக்கு அக்கறை இருக்குமானால், பெற்றோருக்கான தேவையே ஒருபோதும் குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில், அவர்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். நீங்கள் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால் உங்களது அன்பான வழிமுறை குழந்தைகளுக்கு சுதந்திரம் தருவதாக இருக்கவேண்டும், சிக்கவைப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் பல வழிகளிலும் குழந்தையைத் தங்களுக்குரியவர்களாகப் பிணைத்துக் கொள்வதற்குப் பெற்றோர்கள் முயற்சி செய்கின்றனர். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு முழுக்க முழுக்கக் குழந்தைகளின் மூலமாகத்தான் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் உங்கள் அடையாளங்கள் மற்ற வழிகளில் வெளிப்படுகிறது. ஆனால் உங்களது குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியதும், உங்கள் குழந்தைகளின் மூலமாக உங்களை அடையாளப் படுத்திக்கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். அவர்கள் மூலமாக வாழ்வதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள். ஆகவே உங்களுடைய இயல்பு, சிந்தனை மற்றும் உணர்தலுக்கு ஏற்ப அவர்கள் பொருந்தி வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படியெல்லாம் இருக்கவேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் உங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கமுடியும்.

ஒரு நிறைவான உயிராக உங்களை நீங்கள் உணர்ந்தால், அப்போது வேறொருவர் மூலமாக உங்கள் வாழ்க்கையை வாழவோ அல்லது உருவாக்கவோ எந்தத் தேவையும் ஏற்படுவதில்லை. பல வழிகளிலும், ஒரு குழந்தையானது கையறு நிலையிலும், அளவுக்கு மிஞ்சி நிர்ப்பந்திக்கப்படும் நிலையிலும் இருக்கிறது. ஏனெனில் குழந்தைக்கு உங்களுக்கு எதிரான தற்காப்பு எவ்வகையிலும் இல்லை. “இல்லை, நான் தவறாக எதுவும் செய்யவில்லை. நான் குழந்தையை அடிப்பதோ அல்லது திட்டுவதோ இல்லை.” அது முக்கியம் அல்ல - உங்கள் எண்ணங்களையும், உங்கள் உணர்ச்சிகளையும் உங்கள் குழந்தை மீது நீங்கள் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எதிராக எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் அந்தக் குழந்தை இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்துவிட்டால், தன்னைச் சுற்றியுள்ளவற்றை கவனிக்கவும், இயற்கை மற்றும் தன்னுடன் நேரம் செலவிடவும் அந்தக் குழந்தையை அனுமதியுங்கள். அன்பும், உறுதுணையுமான ஒரு சூழலை உருவாக்கித் தருவதுடன், எந்தவிதத்திலும் உங்களது நீதிபோதனைகள், கருத்துக்கள், மதம் அல்லது எந்த ஒன்றையும் திணிப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். அவனாகவே வளர அனுமதியுங்கள், அவன் அறிவு வளர அனுமதியுங்கள். வெறும் ஒரு மனித உயிராக உங்கள் குடும்பத்துடனோ அல்லது உங்களது செல்வச் செழிப்புடனோ அல்லது வேறு எதனுடனும் அடையாளப்படாமல் வளர்வதற்கு அனுமதியுங்கள். குழந்தை தனக்கேயுரிய தன்மையில் வாழ்க்கையைப் பார்ப்பதற்கு உதவி செய்யுங்கள். அதனுடைய நல்வாழ்விற்கும் உலகத்தின் நல்வாழ்விற்கும் இது மிகவும் அத்தியாவசியமானது.
அதேநேரத்தில், குழந்தையின்மீது எந்நேரமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்ற மற்ற சக்திகள் சமூகத்தில் உண்டு. கல்விமுறை, நட்பு வட்டம், உங்கள் குழந்தைகள் நடந்துசெல்லும் வீதி இவற்றின் தாக்கம் அனைத்தும் அவன் மேல் நிச்சயம் உண்டு.

ஏதோ ஒருவிதத்தில், தன்னுணர்வற்ற நிலையில் இந்த சமூகக் கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம். அவற்றின் தாக்கங்களை குழந்தையிடமிருந்து 100% நீக்கிவிட முடியாது. ஆனால் உங்கள் வழியிலோ அல்லது சமூகத்தின் வழியிலோ இல்லாமல், அவன் தனது புத்திசாலித்தனத்திலிருந்து, வாழ்க்கையைப் பார்ப்பதற்கான உதவியையும், உறுதுணையையும் மட்டும் நிச்சயம் உங்களால் அளிக்கமுடியும். தற்போது குழந்தையின்மீது வீதியின் தாக்கம் வலிமையாக உள்ளது. அதேநேரத்தில் நீங்கள் அவன் மீது வேறுவகையில் தாக்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். எத்தனையோ காரணங்களை முன்னிட்டு அவன் உங்களை எதிர்க்கவே செய்வான். ஏனென்றால் இளம் வயதில் வீட்டுக் கலாச்சாரத்தைக் காட்டிலும், வீதிக் கலாச்சாரம் மிக அதிகமான ஈர்ப்பு கொண்டுள்ளது. பெரும்பாலான தருணங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல், மாற்று வழிகளில் தாக்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது அவர்களை மேலும் அதிகமாக வீதியின் தாக்கத்தை நோக்கியே தள்ளிவிடுகிறது.

வீதியின் அபாயங்கள் எப்போதும் காத்துக்கிடக்கின்றன. வீதியினால் வரும் அபாயங்கள் என்றால் இவ்வுலகில் வாழ்பவர்களால் வரும் அபாயங்கள்தான். அந்த அபாயங்கள் போதைப் பொருட்களாக இருக்கலாம், ஒரு விபத்தாக இருக்கலாம், மதுவாக இருக்கலாம், ஒரு மரணமாக இருக்கலாம், மேலும் பல்வேறுபட்ட தவறான முறைகளாக இருக்கலாம். இந்த எல்லா விஷயங்களும் வீதியில் உள்ளன. ஆனால் நீங்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் அதை விரும்புகிறீர்களோ, இல்லையோ, இன்றோ அல்லது நாளையோ, உங்கள் குழந்தை, தனது சொந்த புத்திசாலித்தனத்துடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வாழ்க்கையில் எதை, எந்த அளவிற்கு செய்யவேண்டும் என்னும் தேர்வையும் அவன் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு எந்த அளவுக்கு அவன் விரைவில் தகுதி பெறுகிறானோ, அந்த அளவுக்கு நல்லது. ஆனால் அவன் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு குழந்தையை நீங்கள் வீதிக்குத் தள்ள வேண்டும் என்றோ அல்லது உங்களுடைய சொந்த நீதிபோதனைகளால் அவன் மீது எதிர்முனைத் தாக்கத்திற்கு முயற்சிக்க வேண்டும் என்பதோ அதன் பொருளல்ல. மற்றவர்களால் அவன் தாக்கத்திற்கு உள்ளாவதற்கு பதிலாக, அவன் தன் சொந்த புத்திசாலித்தனத்துடன், தன் வாழ்க்கையை பார்ப்பதற்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள், அவ்வளவுதான்.

பல வழிகளிலும் அவன் தனக்கான வழிகாட்டுதல்களை வீதியிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறான். ஏனெனில் விழிப்புணர்வற்ற முறையில் வீட்டில் திணிக்கப்படும் ஒழுக்கங்கள், நீதிபோதனைகள் மற்றும் புரியாத மத ஆசாரங்கள் இவற்றில் அவனால் எந்த அர்த்தத்தையும் பார்க்க முடியவில்லை. அவனால் அவற்றை புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது அவற்றில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவற்றைப் பின்பற்றும்படி அவன் எதிர்பார்க்கப்படுகிறான். தொலைநோக்கில் பார்க்கும்போது, வீதி கலாச்சாரம், அவன் வாழ்க்கையை அழித்துவிடும் என்றாலும் வீட்டிலிருந்து வரும் திணிப்புகளை விட இது மிகவும் அர்த்தமுள்ளதாக அவனுக்குத் தெரிகிறது.

உங்களது கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் நீதிபோதனைகளைக் குழந்தை மீது திணிக்கும் ஒரு இடமாக வீடு இருக்கக்கூடாது. குழந்தையின் மீது திணிப்புகள் இல்லாத மற்றும் குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு ஊக்கமளிக்கக்கூடிய, உறுதுணையான சூழல் உள்ளதாக ஒரு வீடு இருக்க வேண்டும். எப்போதெல்லாம் ஒரு குழந்தை குழப்பத்திற்கு ஆளாகிறதோ - வளரும் பருவத்தில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் எதிர்கொள்ளத் துவங்கும் எவருக்கும் இது நிகழ்வது இயல்புதான் - அப்போதெல்லாம் எப்போதுமே, குழந்தையின் சிந்தனையானது வீதியின் தாக்கத்துக்கு உள்ளாகிறது அல்லது வீட்டினரால் எதிர்முனைத் தாக்கத்துக்கு உள்ளாகிறது. அதற்கு பதில், குழந்தையின் சொந்த புத்திசாலித்தனத்தை அது உபயோகிப்பதற்கு நீங்கள் அனுமதித்தால் - இந்த புத்திசாலித்தனத்தை நான் நம்புகிறேன் - பொதுவாக உங்கள் குழந்தை சரியானதையே தேர்ந்தெடுக்கும். ஆம், சில குழந்தைகள் தவறான பாதையில் போகலாம். ஆனால் அதுதான் உலகின் நிதர்சனம். அவர்களிடம் நீங்கள் தாக்கம் ஏற்படுத்த முயன்றாலும் அது அப்படித்தான் நிகழும்; அப்படி நீங்கள் செய்யவில்லை என்றாலும், அப்போதும் அது நிகழும். ஆனால் குழந்தை மீது வீட்டில் எந்தத் திணித்தலும் இல்லையென்றால், தவறாகப் போவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

வீட்டிலேயே குழந்தை அதிக இணக்கமாகவும், சௌகரியமாகவும் உணர்ந்தால், இயற்கையாகவே அவன் வெளியில் செல்வதைவிட வீட்டில் அதிக நேரம் செலவழிக்க முயற்சிப்பான். தற்போது, வீட்டின் திணிப்புகள் அவனைத் திணறச் செய்வதால், வீட்டில் இருப்பதைவிட வீதிமுனையில் இருப்பதை அவன் அதிக சௌகரியமாக உணரக்கூடும். வீட்டில் அந்த இடைஞ்சல் இல்லாமல் இருந்தால், வீதிமுனையில் அவன் சரணடைய மாட்டான். வீதிமுனையிலிருந்து தப்பித்துவிட்டால், உலகின் கடினமான நிதர்சனங்களை அவன் எதிர்கொள்ள மாட்டான் என்று பொருளல்ல. அது இருக்கத்தான் செய்யும், ஏதோ ஒரு வழியில் அவனை தாக்கத்திற்கு உள்ளாக்கவே செய்யும். ஆனால், தானாகவே சிந்திக்கக் கற்றுக் கொள்வதற்கும், தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தனக்கு எது சிறப்பானது என்று பார்ப்பதற்கும் நீங்கள் அளிக்கும் ஊக்கம்தான் உங்களுக்கான சிறந்த காப்பீடாக, குழந்தை நன்றாக வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த உத்தரவாதமாக இருக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

Anand - madurai,இந்தியா
30-செப்-202213:47:19 IST Report Abuse
Anand இவரிடம் கற்பதற்கு நிறைய இருக்குது முதலில் மோட்டார் சைக்கிள் விடறதற்கு பாடம் இவரிடம் தான் கேட்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X