வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதில் இருந்த இந்திய 'மேப்'பில் காஷ்மீரின் பாதி பகுதிகள் மற்றும் லடாக் ஆகியவை இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கவனித்த பின்னர், அந்த பக்கம் சரி செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் அதிருப்தி குழு என அழைக்கப்படும் 'ஜி23'ல் இடம்பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக டில்லி சென்று சோனியாவை சந்தித்த சசி தரூர், கட்சி மேலிடம் நடுநிலை வகிக்கும் எனக்கூறியுள்ளார். ஆனால், மேலிடத்தின் ஆசியுடன் மல்லிகார்ஜூன் கார்கே களமிறக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், டில்லி சென்ற சரூ தரூர் தேர்தல் நடத்தும் குழுவினரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், கட்சியினருக்கு தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை சசி தரூர் வெளியிட்டார். அதை பார்த்த கட்சியினர் மற்றும் பத்திரிகை நிருபர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த மேப்பில், காஷ்மீரின் சில பகுதிகள், லடாக் ஆகியவை இடம்பெறவில்லை. இது அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் சசி தரூருக்கு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர். இதனையடுத்து, அந்த மேப்பை நீக்கிவிட்டு, புதிய வரைபடத்தை சசிதரூர் அலுவலகம் வெளியிட்டது.

வேட்புமனு தாக்கல் செய்த சசி தரூர் கூறுகையில், நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் முறையாக நடக்கவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ், வேலைவாய்ப்பின்மை, மற்றும் பணவீக்கம் ஆகியன நிலவுகிறது. அதில், காங்கிரசால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். மல்லிகார்ஜூன் கார்கே வேட்புமனு தாக்கல் செய்வது வரவேற்கத்தக்கது. கட்சியின் நலனுக்காக இன்னும் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வர வேண்டும். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து பின்வாங்க போவதில்லை. நாடு முழுவதும் என்னை ஆதரிக்கும் தொண்டர்களை கைவிட மாட்டேன்.இவ்வாறு சசி தரூர் கூறினார்.