சென்னை:'குரூப் - 2 தேர்வு முடிவு அடுத்த மாதமும், குரூப் - 4 தேர்வு முடிவு, டிசம்பரிலும் வெளியாகும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
அரசு துறைகளில் காலியாக உள்ள 5,208 காலியிடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 2' முதல் நிலை தேர்வு, மே 21ல் நடந்தது. அதன் முடிவு, அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதேபோல், 7,301 இடங்களை நிரப்புவதற்காக, ஜூலை 24ல் நடந்த குரூப் - 4 தேர்வின் முடிவுகள், அடுத்த மாதம் வெளியாகவிருந்த நிலையில், டிசம்பருக்கு தள்ளி போடப்பட்டு உள்ளது.
குற்றவியல் அரசு உதவி வழக்கறிஞர் பதவியில், 50 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு; இன்ஜினியரிங் பணிகளில், 626 காலியிடங்களை நிரப்ப, ஜூலை 2ல் நடந்த தேர்வு மற்றும் சிறைத் துறை உளவியலாளர் பணியில் நான்கு காலியிடங்களுக்கு, ஆக., 6ல் நடந்த தேர்வுகளின் முடிவுகள், அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளன.
நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட துறையில் உதவி இயக்குனர் பதவியில், 29 காலியிடங்களுக்கு, மே 28ல் தேர்வு நடந்தது. இதற்கான முடிவு, ஜூலையில் அறிவிக்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபரில் நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.