சென்னை:அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மின்னணு பண பரிமாற்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் சேவைகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கத்துடனும், மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், 'யு.பி.ஐ., கிரடிட், டெபிட் கார்டு' வாயிலாக கையடக்க கருவிகளில் கட்டணம் செலுத்தும் வசதியை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் கூறியதாவது:
இந்த வசதி, 471 கோவில்களில் மட்டும் இல்லாமல், அனைத்து கோவில்களிலும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில், 1,000 கோடி ரூபாய் செலவில், 1,500 கோவில்கள் புனரமைக்கப்பட உள்ளன. திருப்பணிக்கு முதற்கட்டமாக, 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.தற்போது, 300க்கும் மேற்பட்ட கோவில்களில் தமிழ் அர்ச்சனை வழிபாடுகள் நடந்து வருகின்றன. அதற்கான கட்டணத்தில் 60 சதவீதம், அந்த அர்ச்சகருக்கே மானியமாக வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.