சேலம்:தமிழகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களின் டயர்கள் விலை, மூன்று மாதத்தில், 3,000 ரூபாய் வரை அதிகரித்து இருப்பது வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.டயர் தயாரிப்பின் முன்னணி நிறுவனங்களான, எம்.ஆர்.எப்., அப்பல்லோ, ஜே.கே., சியட், பிரிக்ஸ்டோன், மெட்லாக் போன்றவை உள்ளன.இந் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு டயர்களின் விலையை, ஜூலை முதல், மாதம் தோறும், 1,000 ரூபாய் உயர்த்தியதால், மூன்று மாதங்களில் டயர்களின் விலை, 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
லாரிகளில் பயன்படுத்தப்படும் டியூப்லெஸ் டயர் ஜோடி, 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, 46 ஆயிரம் ரூபாயாகவும், 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, 47 ஆயிரம் ரூபாயாகவும் விலை உயர்ந்தது.பஸ்களில் பயன்படுத்தப்படும் டயர் ஜோடி, 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, 57 ஆயிரம் ரூபாயாகவும், 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, 58 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதே போல், கார் டயர்களின் விலை, 2,100 ரூபாய், இருசக்கர வாகனங்களின் டயர்களின் விலை, 500 ரூபாய் உயர்ந்து இருப்பது, வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் செந்தில்செல்வன் கூறியதாவது:விலை உயர்வு மேலும் தொடரும் என தகவல்கள் வெளியாகி வருவது மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனால், இந்த தொழில் மேலும் நெருக்கடியை சந்திக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் டயர்கள் மீதான வரியை குறைத்து மோட்டார் தொழிலை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.