இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர் சரிவுகளிலிருந்து இன்று சற்றே ஆசுவாசமடைந்தது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 270 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தன. குறிப்பாக இந்தியா சிமென்ட்ஸ் மற்றும் அதானி க்ரீன் எனர்ஜி பங்குகள் 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன.
இந்தியா சிமெண்ட்ஸ்
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மார்ச் 31, 2022 ஆண்டு அறிக்கையின் படி ரூ.3,039.3 கோடி கடன் உள்ளது. நீண்ட கால கடனை குறைக்கும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள 700 ஏக்கர் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விற்க முடிவு செய்துள்ளது. அதன் மதிப்பு ரூ.800 கோடி. முன்னதாக இங்கு ஆண்டுக்கு 30 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் ஆலைக்கு திட்டமிட்டிருந்தது நிறுவனம்.
![]()
|
தற்போது மத்திய பிரதேச சுரங்கத்தை இந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ராடெக் கையகப்படுத்த முடிவு செய்திருப்பதாக அறிக்கை வெளியானது. இதனால் இன்று இந்தியா சிமென்ட்ஸ் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்து ரூ.270.3 என்ற அப்பர் சர்க்யூட்டை அடைந்தது. இது தவிர ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆலையையும் விற்க முடிவு செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1,500 - 2,000 கோடி ஆகும்.
அதானி க்ரீன்
2020 முதல் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கி வரும் நிறுவனம் அதானி க்ரீன். கடந்த ஒரு மாதமாக இந்நிறுவனப் பங்கு சரிவில் காணப்பட்டது. இந்த வாரத்தில் வியாழன் வரை மட்டும் 10 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உலகின் மிகப்பெரிய 600 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது. மேலும் அங்கு 150 மெகாவாட் காற்றாலையும் பயன்பாட்டுக்கு வந்தது.
இதனால் இன்று (செப்., 30) 12 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. ஜெய்சால்மரில் 600 மெகாவாட் ஆலை பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம் அதானி க்ரீன் எனர்ஜி தற்போது 6.7 ஜிகாவாட் மொத்த செயல்பாட்டு உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. 2030க்குள் 45-ஜிகாவாட் திறனை எட்டுவதற்கான பாதையில் உள்ளது.