திருப்பூர்:'போதை தரும் மருந்துகளை, டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், விற்பனை செய்ய கூடாது; மீறினால், அக்கடைகளை கண்டறிந்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, விழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை மருந்து வணிகர் சங்கம் சார்பில், பிருந்தாவன் ஓட்டலில், மருந்துகளை போதை பொருளாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு, சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமணன், பொருளாளர் குகன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் (திருப்பூர் சரகம் - 2) ராமசாமி பேசியதாவது:குறிப்பிட்ட சில வலி நிவாரணி, துாக்க மருந்துகளை போதை பொருட்களாக பயன்படுத்துவதாக தகவல்கள் வருகிறது. அத்தகைய மருந்துகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்ய கூடாது.மீறினால், அக்கடைகளை கண்டறிந்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்; விதிமீறும் கடையின் மருந்து உரிமங்கள் ரத்து செய்யப்படும். போதையில்லா மாநிலத்தை உருவாக்க முயற்சி, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு, மருந்து வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.