ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் ஜூன் 3ம் தேதி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழாய்வு பணிகள் துவங்கின.
வடக்குப்பட்டில் இரு இடங்களில் 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் மூன்று மாதங்கள் நடந்த அகழாய்வில் 15க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டனர். முதல்கட்ட அகழாய்வு பணிகள், நேற்றுடன் நிறைவு பெற்றன.இந்த அகழாய்வில் 4,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கறுப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள் கண்டறியப்பட்டன.
தவிர கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், காதணிகள், வட்ட சில்லுகள், இரும்பு பொருட்கள், வளையல் துண்டுகள் மற்றும் 0.82 கிராம் உள்ள தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் இரண்டு என, 2,000க்கும் மேற்பட்ட தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன .தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல்கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை வகைப்படுத்தும் பணி நடக்கிறது. இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகழாய்வு பணிகள் மீண்டும் துவங்கப்படும்' என்றனர்.