செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அருகே புதுநடுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்குள்ள சுனாமி குடியிருப்பில் இளமதி, 52, ஆரணி, 62, வேலாயுதம், 48, சேகர், 46, ஆரணி, 42, ஆகியோர் வசிக்கின்றனர்.
இவர்கள் குடியிருக்கும் இடத்தை, சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்க, ஊர் பஞ்சாயத்துதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக 100 ரூபாய் முத்திரைத்தாளில் கையெழுத்திடும்படி கேட்டுள்ளனர்.
இதற்கு மறுத்த ஐந்து குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்குவதாக, பஞ்சாயத்துதாரர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம், நேற்று முன்தினம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு அளித்தனர்.அதன் விபரம்:நாங்கள் வசிக்கும் இடத்தை எழுதி தரும்படி, பஞ்சாயத்துதாரர்கள் மிரட்டுகின்றனர். கடந்த 26ம் தேதி, நாங்கள் வளர்த்து வந்த நான்கு நாய்களை துப்பாக்கியால் சுட்டு புதைத்தனர். கையெழுத்து போடவில்லை என்றால் எங்களையும் கொலை செய்வதாக கூறுகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுராந்தகம் பொறுப்பு கோட்டாட்சியர் சீதா, கிராமத்திற்கு நேற்று சென்றார். கொன்று புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து, நாய்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரித்து வருகிறார்.