ஓசூர் : ஓசூர் அருகே, புதையலுக்காக விவசாயியை நரபலி கொடுத்த, ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாட்ச்மேனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பொம்மதாதனுார் அருகே, புதுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 52; விவசாயி. இவர் கடந்த, 28 காலை, வீட்டின் அருகே உள்ள வெற்றிலை தோட்டத்தில், ஒரு குழியில் அமர்ந்தபடி இறந்து கிடந்தார். அவரது கையில் குங்குமம், எலுமிச்சை பழம் இருந்தது. தலை துண்டிக்கப்பட்ட கோழி, மண்வெட்டி, பூஜை பொருட்கள் அருகில் இருந்தன. சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து, கெலமங்கலம் போலீசார் விசாரித்தனர். அதில், ஓசூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வாட்ச்மேனாக பணிபுரியும் தர்மபுரி மாவட்டம், முருங்க மர தரிசு கிராமத்தைச் சேர்ந்த மணி, 65, என்பவர் தான், லட்சுமணனை அடித்துக் கொன்றது தெரிந்தது. அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: கொலையான லட்சுமணனின் மகள் தனலட்சுமிக்கு, ஆறு மாதத்திற்கு முன் பேய் பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. பேயை ஓட்ட, தர்மபுரியில் இருந்து சிரஞ்சீவி என்பவர் வந்தார். அவர் வீட்டின் அருகே புதையல் இருப்பதாகவும், நரபலி கொடுத்தால் கிடைக்கும் எனவும் கூறிச்சென்றார். விவசாயி லட்சுமணனுக்கு அந்த புதையலை எடுக்க வேண்டும் என, ஆசை ஏற்பட்டது. இதற்காக, முன் தன்னுடன் பணியாற்றிய மணி உதவியை நாடினார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், மேச்சேரியில் வசித்து வரும் புதுாரைச் சேர்ந்த ராணி என்ற பெண், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சிரஞ்சீவி மூலம் பேய் ஓட்ட வேண்டும் எனவும், லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதனால், ராணியை வரவழைத்து நரபலி கொடுத்து, புதையலை எடுக்க லட்சுமணன் மற்றும் மணி முடிவு செய்தனர். அதற்காக, கடந்த, 27 இரவில் ராணியை, லட்சுமணன் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளனர்.
பூஜை பொருட்களை வாங்கி வைத்து, குழி தோண்டி லட்சுமணன், மணி தயாராக இருந்தனர்; ஆனால், ராணி வரவில்லை. திடீரென லட்சுமணன் அருள் வந்தது போல் ஆடி, மணியை பலமாக அடித்தார். இதனால் தன்னை அடித்துக் கொன்று, புதையலை லட்சுமணன் அபகரிக்க முயற்சி செய்வதை அறிந்த மணி, லட்சுமணனை அடித்துக் கொன்று, குழிக்குள் அமர வைத்து, நரபலி கொடுத்துள்ளார். நீண்ட நேரமாகியும் புதையல் வராததால், அங்கிருந்த லட்சுமணன் பைக்கை எடுத்துக்கொண்டு, மணி தப்பிச் சென்று விட்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.
'டோல்கேட்'டில் ரூ.10 கோடி பறிமுதல்
வேலுார்: வேலுார் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட் அருகே, உரிய ஆவணங்கள் இல்லாமல், காரிலிருந்து லாரிக்கு ஏற்றிய, 10 கோடி ரூபாயை பறிமுதல் செய்து, நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர்.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பள்ளிகொண்டா டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, ஒரு காரில் இருந்து லாரிக்கு, நான்கு பேர் கொண்ட கும்பல் பொருட்களை ஏற்றி கொண்டிருந்தனர். இதைக் கண்ட போலீசார், அந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள், 'பிளாஸ்டிக்' கவரில் செய்யப்பட்ட 'பண்டல்'களை காரில் இருந்து லாரிக்கு மாற்றியது தெரிய வந்தது. போலீசார் அதை பிரித்து பார்த்தபோது, அதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. ஆனால், அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை.
இதை தொடர்ந்து ரூபாய் மற்றும் கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து, நான்கு பேரையும், பள்ளிகொண்டா போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.அந்த பண்டல்களில், 10 கோடி ரூபாய் இருப்பதாக நான்கு பேரும் தெரிவித்தனர். வேலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஷ் கண்ணன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராணுவ வீரர் என கூறி ரூ.79 ஆயிரம் மோசடி
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் டிராவல் ஏஜன்சி துவங்க முயன்ற ஆட்டோ டிரைவரிடம், போலி ராணுவ வீரர் அடையாள அட்டையை காட்டி, 79 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் அருகே பொட்டகவயல் பசுல் ரகுமான் மகன் முகமது தவ்பீக் அலி 27. சொந்தமாக ஆட்டோ ஓட்டிய இவர், சொந்தமாக டிராவல் ஏஜன்சி துவங்க விரும்பினார். வாகனங்களை வாங்கி விற்கும் இணையதளத்தில் தேடினார். குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருந்து 2013 மாடல் கார் விற்பனைக்கு இருப்பதாக தகவல் இருந்தது.காரின் விலை 2.90 லட்சம் ரூபாய் எனவும், 86065 87258 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, 2.50 லட்சம் ரூபாய்க்கு பேரம் முடிவானது. ராணுவ அடையாள அட்டை உட்பட சில ஆவணங்களை 'ஸ்ரீஹான்ஸ் குமார்' என தன்னை அறிமுகப்படுத்திய நபர் அனுப்பினார். முதலில் பார்த்த போது சரியாக தெரிந்ததால், பல தவணைகளாக அவருக்கு, 79 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். திடீரென அந்த நபரின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டு இணையதளத்தில் தேடிய போது, அந்த நபர் தன்னை ராணுவ வீரர் என தெரிவித்து காட்டியது போலி அடையாள அட்டை என்பது தெரிந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது தவ்பீக் அலி, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.
உலக நிகழ்வுகள்:
ஆப்கன் குண்டு வெடிப்பு: 19 பேர் உடல் சிதறி பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் காபூலில் உயர் கல்வி மையம் ஒன்று உள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை மாணவ - மாணவியர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது, மையத்திற்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். மாணவர்கள் சிதறி ஓடினர். போலீசார் வந்து உடல்களை மீட்டபோது, மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. காயம் அடைந்த 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.ஆனாலும், இதற்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் சதி செயல் தான் காரணம் என, அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்.
தேசிய நிகழ்வுகள்:
சிறுமி கூட்டு பலாத்காரம்: 8 பேர் மீது 'போக்சோ'
ஆல்வார் : ராஜஸ்தானில், 16 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்து, பணம் பறித்து வந்த எட்டு இளைஞர்கள் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில், ஆல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷான்கர் பாஸ் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்கள், ஷகில் என்பவருக்கு கிடைத்துள்ளன. இதை வைத்து அவர், 'பணம் தரவில்லை எனில், இப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்' என சிறுமியை மிரட்டியுள்ளார். இதில் பயந்த அச்சிறுமி, குறிப்பிட்ட இடத்துக்கு பணத்துடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த எட்டு இளைஞர்கள் சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அதை மொபைல் போனில் 'வீடியோ' எடுத்துள்ளனர்.
பின் இந்த வீடியோவைவைத்து மிரட்டி, சிறுமியிடம் 50 ஆயிரம் ரூபாய் வரை பறித்து உள்ளனர். ஒரு கட்டத்தில் அச்சிறுமி தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால், சிறுமியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பினர். இது குறித்த புகாரின்படி, போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எட்டு பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10ம் வகுப்பு மாணவனை குத்தி கொன்ற சக மாணவன்
புதுடில்லி : புதுடில்லியில், 17 வயது பள்ளி மாணவன்,மற்றொரு மாணவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டான்.
வடமேற்கு டில்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் தீபன்ஷு என்ற மாணவனை, உடன் படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் கத்தியால் குத்தினான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீபன்ஷு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், ஆசாத் நகரைச் சேர்ந்த ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் கத்தியால் குத்திய மாணவன், உயிரிழந்த மாணவனுடன் ஒரே பள்ளியில் படித்து வருவது தெரிந்தது.
அவனுடன் கைதான மற்ற சிறுவர்கள் வெவ்வேறு பள்ளியைச் சேர்ந்தவர்கள். பள்ளியில் ஏற்பட்ட சிறு சண்டை கொலையில் முடிந்தது விசாரணையில் தெரியவந்தது.கொலை செய்த மாணவன், 'ஆன்லைன்' வாயிலாக, 'பட்டன்' கத்தியை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர்.