லக்னோ, :உத்தர பிரதேசத்தில் பணிக்கு வராமல் ஆறு மாதமாக சம்பளம் வாங்கிய தலைமை மருத்துவ அதிகாரியை, துணை முதல்வர் பிரிஜேஸ் மிஸ்ரா அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தில் டாக்டர் இந்து பாலா சர்மா என்பவர், தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். துணை முதல்வர் பிரிஜேஸ் மிஸ்ரா சமீபத்தில் இங்கு ஆய்வு செய்தார்.

இதில் இந்து பாலா சர்மா, கடந்த ஆறு மாதங்களாக பணிக்கு வராமல் சம்பளம் பெற்றது தெரிய வந்தது. மேலும், வருகைப் பதிவேட்டில் பொய்யாக அவருக்காக வேறு சிலர் கையெழுத்திட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை அதிரடியாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படியும் துணை முதல்வர் பிரிஜேஸ் மிஸ்ரா உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி போலீசாருக்கு, துணை முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.