சென்னை :உலகில் அதிக ரயில் பெட்டிகளை தயாரித்து, சாதனை புரிந்து வரும், சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலை, 'ஹைட்ரஜன்' ரயில் தயாரிப்பு போன்ற எதிர்கால திட்டங்களோடு, 67வது ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கிறது.
இந்திய ரயில்வேயின் பழமையான தொழிற்சாலைகளில் ஒன்றான, பெரம்பூர் ஐ.சி.எப்., ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையை, 1955 அக்., 2ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு துவக்கி வைத்தார்.ஆரம்பத்தில், ரயிலின் உட்புற பாகங்களை பொருத்தும் தொழிற்சாலையாக இருந்தது. அதன்பின் படிப்படியாக உயர்த்து, ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக உருவெடுத்தது.
![]()
|
பயணியர் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்ப, அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலா, ராணுவத்துக்கான ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட, 175 வகையில், 600 வடிவமைப்புகளில், பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மொத்தம், 516 ஏக்கரில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில், 9,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ௧957ல், 100வது ரயில் பெட்டியும்; 1958ல் 500வது; 1962ல் 1,000வது; 2015ல் 50 ஆயிரமாவது ரயில் பெட்டியும் தயாரிக்கப்பட்டது.
இந்திய ரயில்வேக்கு மட்டுமின்றி, தாய்லாந்து, தைவான், ஜாம்பியா, பிலிப்பைன்ஸ், உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, பங்களாதேஷ், மலேஷியா, அங்கோலா மற்றும் இலங்கைக்கு பெட்டி மற்றும் பாகங்களை, 605.75 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது.
கடந்த, 2018- - 19ல் அதிகபட்சமாக 4,166 ரயில் பெட்டிகளை தயாரித்து, உலகின் பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலையாக விளங்குகிறது.குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட, 'வந்தே பாரத்' அதிவிரைவு ரயில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.காலத்துக்கு ஏற்றார்போல், பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களோடு முன்னேறி வரும் ஐ.சி.எப்., ஆலை, நாளை முதல், 67வது
ஆண்டில் பயணத்தை துவங்குகிறது.
ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 66 ஆண்டுகளில், மொத்தம் 68 ஆயிரத்துக்கும் அதிகமாக ரயில் பெட்டிகளை தயாரித்து, உலகில் அதிகமான ரயில் பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த தொழிற்சாலையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல, மத்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிவேகத்தோடு, குறைந்த செலவில், அதிகம் பேர் பயணிக்கும் ரயிலாக 'வந்தே பாரத்' உருவெடுத்துள்ளது. 'வந்தே பாரத், கரீப் ரத்' போன்ற சொகுசு ரயில்கள், குறுகிய துார அதிவிரைவு ரயில்களை அதிகளவில் தயாரிக்க உள்ளோம்.
படுக்கை வசதி பயணியர் ரயில், பார்சல் ரயில் என பல வகையில் தயாரிக்க உள்ளோம். அடுத்தகட்டமாக, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை உள்நாட்டிலேயே தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான, வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள், வரும் ஆண்டுகளில் ஐ.சி.எப்.,பில் நடக்க வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.