சாம்ராஜ்நகர்-''லோக்சபாவில் 'மைக் ஆப்' செய்யப்படுகிறது. சட்டசபையில் பேச காங்கிரசாருக்கு வாய்ப்பளிக்கவில்லை. எனவே, எங்களுக்கு யாத்திரையை தவிர வேறு வழியில்லை,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல் தலைமையில், 'பாரத் ஜோடோ' யாத்திரை கடந்த மாதம் 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் துவங்கியது. அங்கிருந்து கேரளா வழியாக வந்த யாத்திரை நேற்று சாம்ராஜ்நகரின் குண்டுலுபேட் வழியாக கர்நாடகாவிற்குள் நுழைந்தது.அங்கு நடந்த பொதுக்கூட்டத்தை எம்.பி., ராகுல், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகியோர், முரசு அடித்து துவக்கி வைத்தனர். ராகுல் கூறியதாவது:இந்த யாத்திரை, நாட்டின் குரல். இங்கு, நான் ஒருவன் மட்டும் அல்ல; பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களது கஷ்டங்களை தெரிவிப்பர். இங்கு ஜாதி, மதம், மொழி என்ற பாகுபாடு இல்லை. அரசியலமைப்பை பாதுகாப்பதே இந்த யாத்திரையின் நோக்கம். இதை தடுக்கும் சக்தி யாருக்கும் கிடையாது.நாடு எதிர் கொண்டுள்ள பிரச்னைகள், வன்முறை குறித்த எந்த பிரச்னைகளைப் பற்றியும் பேச, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. லோக்சபாவில் 'மைக் ஆப்' செய்யப்படுகிறது; சட்ட சபையில் பேச வாய்ப்பில்லை; எனவே யாத்திரையை விட்டு, மக்களிடம் பேச வேறு வழியே இல்லை.நாங்கள் இங்கு நீண்ட நேரம் பேச மாட்டோம். ஆறேழு மணி நேரம் நடப்போம்; 15 நிமிடம் பேசுவோம். மக்கள் பேசுவதை கேட்போம். ஊழல், விலை உயர்வு, வேலையின்மை, அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது குறித்து மக்கள் பேசுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பாரத் ஜோடோ யாத்திரையை முன்னிட்டு நேற்று, இன்று என இரண்டு நாட்கள் கேரளா - கர்நாடகா எல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கேரளாவின் சுல்தான் பத்தேரியில் இருந்து முகஹோளே வழியாக மைசூரு செல்லும் வாகனங்கள் குண்டுலுபேட்டில் உள்ள, ககலதஹுண்டியில் இருந்து சென்னமல்லிபூர், ஹொங்கஹள்ளி, ஆலத்துார் வழியாக செல்ல வேண்டும்.கேரளாவின் சுல்தான் பத்தேரியில் இருந்து முகஹோளே வழியாக ஊட்டி செல்லும் வாகனங்கள், குண்டுலுபேட் கக்கலடஹுண்டியில் இருந்து பெரம்பாடி- வழியாக ஊட்டிக்கு செல்ல வேண்டும்.