தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில், இந்திரன் கற்சிலை மாயமானதாக புகார் எழுந்ததால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர், பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவாயிலில், இந்திரன் சன்னிதியில் இருந்த சிலை மாயமாகி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்படி நேற்று, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான போலீசார், கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறை, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், கோவில் பணியாளர்கள், சிவச்சாரியார்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்திரன் சிலை தொடர்பாக, இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே, சிலை குறித்த தகவல்கள் முழுமையாக தெரிய வரும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.