தங்கவயல்-தங்கவயலில் கோலோச்சிய நுாற்றுக்கும் அதிகமான தமிழ்ப் பள்ளிகளில் ஓரிரு தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே உள்ளன.
மறுபடியும் இப்பள்ளிகள் இயங்குமா என்பது தமிழர்களின் ஏக்கமாக உள்ளது.'எங்கும் தமிழ்', 'எதிலும் தமிழ்' என்று இருந்த தங்கவயலில் நுாறாண்டுகளாக தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே ஆதிக்கமாக இருந்தன. தமிழ்ப் பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க அட்மிஷனுக்கு தவம் இருந்த காலமும் உண்டு.ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை ஏ.பி.சி.டி., என நான்கு பிரிவுகளில் தலா 60 மாணவர்கள் படித்து வந்தனர். அனைத்து பாடங்களையும் தமிழில் படித்து வந்தனர். ஆனால், முப்பது ஆண்டுகளாக தமிழ் படிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. கர்நாடக அரசு, கோகாக் கமிஷன் பரிந்துரைப்படி கன்னட மயமாக்கியது. இதன் விளைவால், கன்னடம் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்பு என்ற நிலையில், கன்னடம், ஆங்கில வழியில் கல்வி பயில துவங்கினர். இதனால் நான்கைந்து தலைமுறையாக தமிழ் கற்பித்து வந்த பள்ளிகள் மூடப்பட்டன. சில பள்ளிகள் ஆங்கில பள்ளிகளாக மாறின.தமிழில் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மேற்பட்ட படிப்புகளை முடித்தவர்கள் பலர் உள்ளதை, பட்டியல் போட்டு காண்பித்த மைசூர் மைன் செல்லப்பா பள்ளியும் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இப்பள்ளியை 1906 ல் நிறுவிய செல்லப்பாவின் சிலையும், அதன் கல்வெட்டும், தமிழ் வாழ்ந்த வரலாற்றை நினைவூட்டுகிறது. இத்தகைய பள்ளி சீரழிந்துள்ளது.மறுபடியும் இப்பள்ளி இயங்குமா; தமிழர்கள் தமிழ் கற்கும் காலம் வருமா என்பது முதியவர்களின் ஏக்கமாக உள்ளது.