புதுச்சேரி ; மனைவிக்கு 'மெசேஜ்' அனுப்பிவிட்டு, மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடி சொக்கநாதன் பேட் அணைக்கரை வீதியைச் சேர்ந்தவர் நஜீருதீன், 31. இவருக்கு பியாரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில மாதங்களாக நஜீருதீன் வேலைக்கு செல்லாமல், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், தனது பணத்தை இழந்ததுடன், மேலும் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் தொல்லையால் நஜீருதீன், மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி மாலை 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற நஜீருதீன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, அன்று மாலை 4:30 மணிக்கு நஜீருதீன் தனது மனைவி பியாரியின் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில் 'நான் மும்பை செல்கிறேன், நான் அதிக பணத்தை இழந்துவிட்டதால், இந்த பூமியில் வாழ விரும்பவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பியாரி, கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, நஜீருதீனை தேடிவருகின்றனர்.