சேலம் : சேலம், குகையை சேர்ந்தவர் ஜெகதீஷ், 53. இவருக்கு, ஏற்காட்டில் ஓட்டல் உள்ளது. அதை விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்தார். கடந்த ஜூலை, 26ல், அவரது மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், 'ஓட்டலை வாங்க விரும்புகிறேன். மார்க்கெட் விலையை விட, 50 சதவீதம் கூடுதல் விலை தருகிறேன். நிர்ணயித்த தொகையில் பாதியை உடனே செலுத்தவும் தயார். அதற்கு, விற்பனை செய்பவர்கள், பதிவுத்தொகை, 73 ஆயிரத்து, 900 ரூபாய் அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
கூடுதல் விலை என்பதால் ஆசைப்பட்ட ஜெகதீஷ், அந்த மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு, 73 ஆயிரத்து, 900 ரூபாயை அனுப்பினார். பணம் சென்றடைந்த நிலையில், மர்ம நபர் பேசிய மொபைல் எண் அனைத்து வைக்கப்பட்டது. ஏமாற்றப்பட்டது குறித்து, ஜெகதீஷ் ஆக., 4ல் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், ஜெகதீஷ் அனுப்பிய பணம், டில்லியில் உள்ள வங்கி கணக்குக்கு சென்றதும், பின் அந்த கணக்கில் இருந்து, 4 தனியார் வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து வங்கிகளின் நிர்வாக பிரிவுகளுக்கு சேலம் மாநகர போலீசார் தகவல் தெரிவித்து, மோசடி நபர்களின் பணப்பரிமாற்றத்தை நிறுத்தி வைத்தனர். மேலும் மோசடி நபர்களின் வங்கி கணக்கு ஒன்றில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயை ஜெகதீஸ் வங்கி கணக்குக்கு நேற்று திரும்ப கிடைக்க செய்தனர். மீதி தொகையை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.