சேலம் : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட அளவில் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது: சுகாதாரத்துறை, நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளையும், குறிப்பிட்ட இடைவெளிக்குள், குளோரினேஷன் செய்திட வேண்டும். மாநகராட்சியில் குப்பை தேங்காதபடி நடவடிக்கை தேவை. சாலை சேதத்தையும் சீரமைக்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறை, கட்டடங்களின் உறுதித்தன்மையை அறிந்து உடனடி அறிக்கை அனுப்புவதோடு, சிறு சேதம் இருப்பின், உடனே சரிசெய்ய வேண்டும். மீன் வளத்துறை, படகு, அதை இயக்குபவர் குறித்த விபரம், மீனவர்களின் விபரத்தை அனுப்ப வேண்டும். தீயணைப்புத்துறை, உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
மின்வாரியம், மின் பாதைகளை முறையாக பராமரிப்பதோடு, 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம், குடிநீர் குழாய் இணைப்புகளில் மழைநீர் கலந்திடாதபடி, நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை, சாலை உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தும், பொதுப்பணித்துறை, நீர்நிலைகள் இருப்பு விபரம் குறித்த விபரத்தை அறிக்கையாக வழங்க வேண்டும். பாதிப்பு தொடர்பாக, 1077, 0427 - 2452202 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.