நாமக்கல் : 'மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்துவரும் தொண்டு நிறுவனங்கள், அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி, பயிற்சி, மறுவாழ்வு அளித்தல் மற்றும் இதர செயல்பாட்டினை அளிப்பதே நிறுவனம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நிறுவனத்தை செயல் படுத்துவதற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். நலச்சட்டத்தின் கீழ், அங்கீகாரம் பெறாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள், சிறப்புப்பள்ளிகள், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் சட்டத்தில், அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறப்புப்பள்ளிகள், 'மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம், அறை எண்:07, கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் -637003' என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, உடனடியாக பதிவு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.