சென்னை: 'தி.மு.க. தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுவோர் வரும் 7ம் தேதி மனு தாக்கல் செய்யலாம்' என அக்கட்சி அறிவித்துள்ளது.
தி.மு.க. உட்கட்சி தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மொத்தமுள்ள 72 மாவட்டச் செயலர்களில் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்; 7 மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து தி.மு.க. தலைவர் பொதுச்செயலர் பொருளாளர் 4 தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதில் போட்டியிட விரும்புவோர் வரும் 7ம் தேதி மனு அளிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:தலைவர் பொதுச்செயலர் பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது. போட்டியிடுவோர் 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேர் முன்மொழிய வேண்டும்; ஐந்து பேர் வழிமொழிய வேண்டும்.
அனைத்து நடைமுறைகளிலும் கட்சி தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மனு பரிசீலனைக்கு பின் வரும் 9ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தலைவர் பொதுச்செயலர் பொருளாளர் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.