மதுரை: 'தமிழக பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலமாக நடத்தப்படுகிறது.
இதனால் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க சிரமம் உள்ளது. அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதுடன், பணியாளர்களுக்கும் இன்னல்கள் ஏற்படுகிறது. எனவே, பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். மேலும் 2021, பிப்ரவரியில் அறிவித்த புதிய ஊதிய உயர்வை அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு முரண்பாடுகளை களைய குழு அமைக்க வேண்டும்.
கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 2015ல் வழங்கிய விற்பனை முனையம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. இதில் அடிக்கடி பழுது ஏற்பட்டு இணையதள சேவை சரியாக கிடைப்பதில்லை. இதனால் ரேஷன் பொருள் வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது.எனவே 4 ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டு மற்றும் மோடம் வழங்க வேண்டும். விற்பனை முனையத்தில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் தொகையை விற்பனையாளரிடம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.
கண் விழித்திரை அடிப்படையில் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும். எனவே, ரேஷன் ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.,14 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட உள்ளது. எங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு அழைத்துப் பேசவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.