பழநி:'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்று நுால் கடல் தாமரை. அவரது, 114வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், பழநி சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன், 'கடல் தாமரை' என்ற வார்த்தைகளை, 2022 முறை பயன்படுத்தி டி.வி.ஆர்., உருவப் படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
'பர்மனென்ட் மார்க்கர்' வாயிலாக, மூன்று வண்ணங்களில் கடல் தாமரை என்ற வார்த்தைகளை எழுதி டி.வி.ஆர்., உருவத்தை அன்புச்செல்வன் உருவாக்கி உள்ளார். மேலும், இதில் வண்ண, 'ஆயில் பேஸ்ட்' பயன்படுத்தி மெருகேற்றியுள்ளார். தன் பணிகளுக்கிடையே இரண்டு வாரங்களில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார்.
சில ஆண்டுகளாக டி.வி.ஆர்., பிறந்த நாள் அன்று அவரது உருவப்படத்தை வித்தியாசமாக வடிவமைப்பார். நம் நாளிதழில் வெளிவந்த முக்கிய கட்டுரைகள், படங்களை கண்காட்சி யாக அமைப்பார். தேர்தல் களம், பட்டம், அக்கம் பக்கம் கார்ட்டூன்கள், ஆண்டு மலர் ஆகியவற்றை பாதுகாத்து வைத்துள்ளார். தினமலர் நாளிதழில் வெளியாகும் சில பகுதிகளை, பிரேம் செய்து வீட்டில் மாட்டியுள்ளார்.
அன்புச்செல்வன் கூறியதாவது: கடந்த, 2021ல் 'தினமலர்' நாளிதழ் வழங்கிய லட்சிய ஆசிரியர் விருதுடன், 'கடல் தாமரை' புத்தகத்தை பரிசாக பெற்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் நினைவாக, 'கடல் தாமரை' என்ற வார்த்தைகளை பயன்படுத்தி, டி.வி.ஆர்., உருவப் படத்தை இந்தாண்டு வரைந்துள்ளேன்.
என்னை போன்ற ஓவியர்களை தினமலர் அங்கீகரிக்கிறது. தினமலர் நாளிதழில் வெளியாகி உள்ள பகுதிகளை என் வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.