வேலுார்:வேலுார் அருகே, காற்றில் பறந்து வந்த கள்ள நோட்டுக்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கொணவட்டம் பகுதியில், நேற்று காலை, காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் எடுத்துச் செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேலுார் வடக்கு போலீசார் அங்கு சென்று, சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அதில், அவை அனைத்தும், 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள் என தெரிந்தது.மொத்தம், 14.50 லட்சம் ரூபாய் அளவுக்கு இருந்த அவற்றை போலீசார் கைப்பற்றினர். அப்பகுதி, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், காரில் வந்த நான்கு பேர் கள்ள நோட்டுக்களை சாலையில் வீசியதும், காற்றில் பறிந்த அவற்றை மக்கள் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.