மரியாதை தாண்டமாடுது
விருதுநகரில், அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.
அவர் பேசிய போது, 'ஸ்டாலினின் ஆட்சி...' என துவங்கி, உடனே பேச்சை நிறுத்தினார். சில வினாடி அமைதிக்கு பின், மீண்டும் பேச துவங்கிய அவர், 'இப்போது இருக்கக் கூடிய முதல்வரின் ஆட்சி விளம்பர ஆட்சி... விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது என, என் தலைவர் எம்.ஜி.ஆர்.,பாடலிலேயே வரும்...' என்றார்.இளம் நிருபர் ஒருவர், 'ஸ்டாலின் என்று கூறியவர், பின் மரியாதையாக முதல்வர் என்கிறாரே...' என முணுமுணுத்த போது, அருகில் இருந்த மூத்த நிருபர், 'வழக்கம் போல ஆவேசம் காட்ட பார்த்திருப்பார்... அணிவகுக்கும் வழக்குகள் சட்டென நினைவுக்குவந்திருக்கும்... அதான் மரியாதை தாண்டவமாடுது...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.
'கோவிலிலும் அரசியலா?'
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், 'தி.மு.க., அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தோலுரிக்கும் விதமாக, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க.,வின் ஒரே நம்பிக்கை பழனிசாமி. அவருக்கு தென்மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்ற வேறுபாடு கிடையாது.
'பொதுக்குழுவை கூட்டி, அவரை பொதுச்செயலராக தேர்ந்தெடுக்க எந்த தடையும் கிடையாது. விரைவில், பொதுக்குழு நடக்கும். அ.தி.மு.க.,வில் கடைக்கோடி தொண்டனும், உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதற்கு, பல உதாரணங்கள் உள்ளன. அதில், நானும் ஒருவன்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்துலயும், இவரு அரசியல் பேசுறாரே...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'அரசியலில் எந்த பிரச்னையும் இல்லாம, வண்டி ஓடணும்னு தானே இவங்கெல்லாம் கோவிலுக்கே வர்றாங்க...' என 'கமென்ட்' அடித்து சிரித்தார்.
'பதற்றத்துல உளறிட்டாரு!'
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் தொகுதி சார்பில், அண்ணாதுரையின், 114வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், குன்றத்துார் ஒன்றியம் பூந்தண்டலத்தில் நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பழனி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., பழனி பேசுகையில், 'முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், கழக பொதுச்செயலர், அ.தி.மு.க.,வுக்கு தலைமை தாங்கும் தலைவர் அண்ணன் ஓ.பி.எஸ்., வாழ்க' என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டார்.
இதைக்கேட்ட கூட்டத்தில் இருந்தவர்கள் திருதிருவென விழிக்க, சுதாரித்த பழனி, 'மன்னிக்கவும்' எனக்கூறி, 'இ.பி.எஸ்., வாழ்க' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'பன்னீர்செல்வம் ஞாபகத்துல இருக்காரே... ஒருவேளை இவரு அணி மாறப் போறாரோ...' என, முணுமுணுக்க, அவரது ஆதரவாளர், 'இல்லீங்க... அண்ணன் பதற்றத்துல தான் உளறிட்டாரு...' என, அசடு வழிந்தார்.