மதுரை:மதுரையில் போலி ஆவணங்கள் வாயிலாக, இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பான வழக்கில், 37 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
மதுரை, அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலி முகவரி, அடையாளச் சான்று வாயிலாக இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட்டுகள், 2019ல் வழங்கப் பட்டன.கியூ பிராஞ்ச், சி.ஐ.டி., போலீசார், 2019ல் வழக்கு பதிந்தனர். விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.அவ்வாறு முடிக்காததால், வழக்கறிஞர் முருக கணேசன், கியூ பிராஞ்ச் போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரினார்.
செப்., 23ல் நீதிபதிகள் அமர்வு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், '40 பேருக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் கியூ பிராஞ்ச் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசின், 16 அலுவலர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்தார்.வழக்கில் தொடர்புடைய, 37 பேர் ஆஜராகினர். அவர்களில் மதுரை நகர் நுண்ணறிவு உளவுப்பிரிவுஉதவி கமிஷனராக இருந்த சிவகுமார், பாஸ்போர்ட் மற்றும் தபால்துறை அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. விசாரணையை வரும், 28க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.