சென்னை:சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மரணம் அடைந்தார்.
கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், 68. உடல் நலம் பாதிப்பு காரணமாக, அக்கட்சியின் மாநில செயலர் பதவியில் இருந்து விலகினார். திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்ததால், 'ஏர் ஆம்புலன்ஸ்' வாயிலாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இங்கு, ஆக., 29 முதல் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது மனைவி வினோதிரி உடன் இருந்து கவனித்து வந்தார். கேரளா முதல்வர் பினராயி விஜயன் வந்து நலம் விசாரித்து சென்றார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கொடியேறி பாலகிருஷ்ணன் மரணம் அடைந்தார்.
அவரது உடல், கேரளா எடுத்து செல்லப்பட உள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கொடியேறி பாலகிருஷ்ணன் இறப்புக்கு, அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.