ஈரோடு:ஈரோடில் பூங்காவை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக, துணை மேயர் மீது, தி.மு.க., கவுன்சிலரே குற்றம் சாட்டி, அமைச்சர் முத்துசாமியிடம் மனு கொடுத்து உள்ளார்.
ஈரோடு மாநகராட்சி, எட்டாவது வார்டுக்கு உட்பட்ட எல்.வி.ஆர்., காலனியில் பூங்கா உள்ளது. இப்பகுதியை துணை மேயர் செல்வராஜ் ஆக்கிரமிக்க முயல்வதாக, வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர் மற்றும் குடியிருப்புவாசிகள், அமைச்சர் முத்துசாமியிடம் மனு அளித்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:எல்.வி.ஆர்., காலனி குடியிருப்போர் பூங்காவில், சில இளைஞர்கள் இரவு நேரத்தில் மது அருந்தியும், தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அவர்களை கண்டித்தபோது, போதை இளைஞர்களுக்கு ஆதரவாக, துணை மேயர் செல்வராஜ் வந்தார். எங்களை தகாத வார்த்தை பேசி, பூங்காவுக்குள் யாரும் வரக்கூடாதென மிரட்டினார். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., கவுன்சிலர் ஸ்ரீதர் கூறியதாவது: பூங்காவில் மது அருந்தும் இளைஞர்கள், துணை மேயருக்கு தேவைப்பட்டவர்கள். இதனால் காலனி மக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். அராஜகத்தில் ஈடுபடும் அவர் மீது நடவடிக்கை கோரி, அமைச்சர் முத்துசாமியிடம் இருமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
துணை மேயர் செல்வராஜ் கூறியதாவது: என்னை தவறாக சித்தரித்து, அமைச்சர் முத்துசாமியிடம் இருமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர் ஸ்ரீதர், அப்பகுதியில் உள்ள சிலரை திரட்டி எனக்கு எதிராக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.