திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே அணை நீரில் மூழ்கி இரண்டு பெண் குழந்தைகள் பலியாயினர். தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி டவுனை அடுத்த சுத்தமல்லி பெரியார் நகரை சேர்ந்தவர் கண்ணன் 35, ஜவுளிக்கடையில் பணியாற்றுகிறார். மனைவி மாரியம்மாள் 30. இவர்களது குழந்தைகள் மாதுரி தேவி 4, நிரஞ்சனா தேவி(8 மாதம்). மாரியம்மாள் ஆட்டோவில் இரண்டு குழந்தைகளுடன் சுத்தமல்லியில் தாமிரபரணி குறுக்கே உள்ள சிறிய அணைக்கு வந்தார். அப்போது குழந்தைகள் ஆற்றில் தவறி விழுந்தனர். மாரியம்மாளும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மாரியம்மாளை மீட்டனர். குழந்தைகள் இருவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரித்தனர். குடும்ப பிரச்னையில் மாரியம்மாள் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரிகிறது. அவரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்