'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., 114வது பிறந்த நாள்; கல்விக்காக தன்னையே கரைத்துக் கொண்டவர்

Updated : அக் 03, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
கிட்டத்தட்ட, 884 பள்ளிகளையும், 46 கல்லுாரிகளையும்,பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியையும் கொண்டு தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் மாவட்டம் என்று இன்று கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது என்றால் அதற்காக பாடுபட்டவர்களில் ஒருவர் தான் நம் பெருமைக்குரிய 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்.,அடிமைப்பட்டிருந்த மக்கள், தாங்கள்
தினமலர் ,  நிறுவனர், டிவிஆர், 114 ,பிறந்த நாள்

கிட்டத்தட்ட, 884 பள்ளிகளையும், 46 கல்லுாரிகளையும்,பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியையும் கொண்டு தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் மாவட்டம் என்று இன்று கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது என்றால் அதற்காக பாடுபட்டவர்களில் ஒருவர் தான் நம் பெருமைக்குரிய 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்.,அடிமைப்பட்டிருந்த மக்கள், தாங்கள் அடிமைப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்து, சுதந்திரம் பெற்ற மக்களாக வாழ வேண்டும், உலகத்தின் முன்னேற்றங்களை எல்லாம் எய்த வேண்டும் என்ற நினைப்பிற்கு வருவதற்கு நல்ல தரமான கல்வி தேவைப்பட்டது.ஜாதி, மதம் போன்ற குறுகிய நோக்கில் இருந்து சமுதாயம் விடுபட வேண்டும் என்றால், அதற்கும் கல்விதான் துணை செய்ய முடியும் என்பதை, எளிமையான வார்த்தைகளால் மக்களுக்கு புரியவைத்தார்.இதற்கு கட்டாயக் கல்வித் திட்டமே கைகொடுக்கும் என்பதை உணர்ந்து, நிறைய கட்டுரைகள் எழுதினார். இதன் அடிப்படையில் 'கட்டாய இலவசக் கல்வி உபதேசக் கமிட்டி' என்று ஒரு கமிட்டி ஏற்படுத்தப் பட்டது. அந்தக் கமிட்டியில் டி.எம்.சிதம்பரதாணுப் பிள்ளை எம்.எல்.சி., முன்னாள் அமைச்சர் பி.எஸ்.நடராஜபிள்ளை, முன்னாள் எம்.எல்.,ஏ., ஆர்.எஸ்.நாடார், எஸ்.திரவிய நாடார், டி.வி.ஆர்., ஆகிய ஐந்து பேரை நியமித்து, அரசு 'கெஜட்டும்' வெளியிட்டது.இந்தக் குழுவினர், ஊர் ஊராக சென்று, கட்டாயக் கல்வியின் நன்மையையும், அவசியத்தையும் எடுத்துக் கூறி, மூன்று மாதத்திற்குள், 50 பள்ளிக் கட்டடங்கள் வரை கட்டி விட்டனர். இடத்தை மக்கள், இலவசமாகக் கொடுத்தனர். கட்டடம் கட்டத் தேவையான பணத்தை, ஊர்ப் பிரமுகர்களிடம் அரசு கொடுத்தது. மக்களோ அரசாங்கம் கொடுத்த பணத்திற்கு மேலாக தங்கள் கைப்பணத்தைப் போட்டு தங்கள் ஊர்ப் பள்ளிக் கூடம் என்ற அபிமானத்தில் அழகு அழகாய்க் கட்டி விட்டனர். காரணம் சுதந்திரத்திற்கு பின் மக்களிடம் இருந்தது எல்லாம் கல்வி தாகம் தான்.இந்தக் கண்ணோட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் தொண்டில் தன்னை முழுக்க முழுக்க டி.வி.ஆர்., ஈடுபடுத்திக் கொண்டார்.அதற்காகப் பெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உரிமையுடன் டி.வி.ஆர்., வீட்டுக்குப் போய்ப் படிப்புச் செலவிற்கு பணம் பெறுவர். 'நான் கொடுத்தேன் என்று வெளியில் சொல்லாதே' என்று சொல்லிவிட்டு பலரது படிப்பு செலவிற்கும் உதவினார். திருநெல்வேலி, நாகர்கோவில் சாலையில் உள்ள வெள்ளமடம் என்ற ஊரில் முதல் கட்டடத்திற்கு சி.பி.ராமசாமி ஐயர் அடிக்கல் நாட்டி நடத்திய மூன்று மாதத்திற்குள், அப்பள்ளி செயல்படத் துவங்கியது.கன்னியாகுமரி மாவட்ட மக்களை இன்று, ஹிமாச்சலப் பிரதேசம் முதல் குமரி வரை, உத்தியோகத்திலும் வேறுபல அலுவல்களிலும் காணலாம்; டாக்டர்களோ மிக அதிகம்.
இலவச கல்வித் திட்டம்இந்த நன்மைக்கு மூலகர்த்தா சர்.சி.பி. ராமசாமி ஐயர் துவங்கிய கட்டாய இலவசக் கல்வித் திட்டம், முதல் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கப்பட்டது தான். இதை வெற்றிகரமாக அமலாக்க வடம் பிடித்து இழுத்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதை டி.வி.ஆர்., அடிக்கடி பெருமையுடன் நண்பர்களிடம் பேசுகையில் குறிப்பிடுவார்.கன்னியாகுமரி மாவட்டம் பல்வேறு துறைகளில் முன்னேற வேண்டும் என்று தான் கொண்டிருந்த பெரும் ஆவலின் காரணமாக எழுந்தது தான், 'கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக் கழகம்' என்ற திட்டம். இது வெறும் ஆசையின் உந்துதல் மட்டுமன்று. நியாயத்தின் அடிப்படையிலும் மிகச் சரியான கோரிக்கையே என்பதைப் பல்வேறு காரணங்களுடன் சிந்தித்தார் டி.வி.ஆர்., ஒரு பணியை பற்றிய சிந்தனை வருமானால், அதைச் செயலாக்க, அத்துறையில் உள்ள நிபுணர்களை இணைத்து ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் மூலமே பணிகளை முடுக்கி விடுவது டி.வி.ஆரிடம் காணப்படும் தனிச் சிறப்பு.latest tamil news


அவரின் ஆலோசனையில் இவ்வாறு பல குழுக்கள் கன்னியாகுமரி மாவட்ட நலனுக்கான இயங்கி வந்தன.கங்கைக் கரையில் இருக்கும் காசியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி, அதன் பெருமையை உலகறியச் செய்தார் மாளவியா. மஹா பாரதப் போர் நடத்த, குருஷேத்திரத்தின் பெருமையை நினைவுறுத்த, ஒரு பல்கலைக் கழகம் அங்குச் செயல்பட்டு வருகிறது. புனித சங்கமக் கரையிலுள்ள அலகாபாதிலும், பாடலி என்று வழங்கப்பட்ட பாட்னாவிலும் பல்கலைக் கழகங்கள் அவ்வூர்களின் பெருமையை விளக்கமுறச் செய்கின்றன. வட மாநிலத்திலுள்ள புண்ணிய தலங்களிலெல்லாம் பல்கலைக் கழகங்கள் செயல்படும்போது, தென்கோடியிலுள்ள புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் இதுவரை பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவாமல் இருப்பது வருந்தத்தக்கது. இங்கு பல்கலைக்கழகங்கள் இருக்குமானால் பல ஆயிரம் மாணவர்கள் உயர்தரக் கல்வி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். கல்வியின் தரம் உயர்வதற்கும் வழி செய்யும். இதை உலகில் வளர்ச்சியுற்ற நாடுகளில் பார்க்கிறோம். எனவே, தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் தோன்ற வேண்டும். அதில் சில, கன்னியாகுமரிக்கும் வரவேண்டும்.


வரலாற்றுச் சின்னங்கள்கன்னியாகுமரிக்கு பல்வேறு சிறப்புகளும் தனித்தன்மைகளும் உண்டு.தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நுாற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்துள்ளது.இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.பாரதத்தின் விடுதலைப் போர் 1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்துடன் ஆரம்பமாயிற்று என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது வழக்கம்.

ஆனால், அதற்கு வெகு காலத்திற்கு முன்னரே ஆங்கிலேயருக்கு எதிராக மக்களைப் புரட்சி செய்யத் துாண்டி, குண்டறை என்ற ஊரில் 1809ல் உரிமைச் சாசனம் ஒன்றை பறைசாற்றிய வேலுத்தம்பித் தளவாய் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்.மாவட்டத்தில் ஏனைய இடங்களை விடக் கன்னியாகுமரியில் கூடுதலாகவே ஆரம்பப் பள்ளிகளும், உயர்தர பாடசாலைகளும் இருக்கின்றன. ஆனால், கல்லுாரி படிப்புக்கு உள்ள வாய்ப்புகள் மிகக் குறைவு. வெளி மாவட்டங்களுக்கு ஒரு மாணவனை அனுப்பிப் படிக்க வைப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படும். தொழில் கல்விக்கும், மருத்துவக் கல்விக்கும், இம்மாவட்ட மாணவர்களுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை. மாவட்டத்தின் தேவைக் கேற்ப இடம் ஒதுக்கப்படுவதில்லை.இப்பிரச்னைகள் அனைத்தையும் கன்னியாகுமரிப் பல்கலைக்கழகம் தீர்க்க முடியும். ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும். ஆகவே கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைவது அவசியம் என்பதை டி.வி.ஆர்., பல நேரங்களில் வலியுறுத்தினார்.இதற்காக ஜூன் 11, 1965ல் நடந்த பத்திரிகை நிருபர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்த டி.வி.ஆர்., கூட்டத்தில் 'கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தகுந்த வாய்ப்பு இருக்கிறது. இங்கு கல்விச் செல்வம் இருக்கிறது. பல்கலைக்கழகம் வேண்டும். அதற்கு நிதியும் தேவை.'பல்கலைக்கழகம் பல பிரிவுகள் கொண்டது. கலை, விஞ்ஞானம் முதலிய பிரிவும் அமைக்க 4 கோடி ரூபாய் செலவாகும். பொறியியல் கல்லுாரிக்கு கூடுதல் 1 கோடி, மருத்துவப் படிப்புக்கு இன்னும் ஒரு கோடியாகும். பல்கலைக் கழகத்திற்கு பெருவாரியான நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. 'அதற்கு அடுத்து பல்கலைக்கழகக் கமிஷன், பின் ராஜ்ய சர்க்கார், கல்லுாரிகள் முதலியவை உதவும். எனவே, இரண்டு கோடியில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் டிரஸ்டுகள் உண்டு. கோவில் டிரஸ்டுகள், மக்களின் அறிவு வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும்.


ஆக்கப்பூர்வமான திட்டம்'சமுதாய சொத்தைக் கல்விப் பணிக்கு ஒதுக்குவது நல்லது. சொத்தை விற்பனை செய்ய வேண்டாம். அதன் வருமானத்தின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட காலம் வரை பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்தால் போதும்' என்ற ஆக்கப்பூர்வமான திட்டம் அந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

காமராஜர் முதல்வராக இருந்தபோது, மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார். அன்றைய கல்வி இலாகா டைரக்டர் என்.டி.சுந்தர வடிவேலு இத்திட்டத்தை எட்டயபுரத்தில் முதலில் துவங்கி வைத்தார்.இந்தத் திட்டத்திற்குப் பெரும் ஆதரவு தந்தது திருநெல்வேலி மாவட்டம் தான். இவை மட்டுமல்லாது, திருநெல்வேலியில் சித்த வைத்தியக் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, வைத்தியக் கல்லுாரி, விவசாயக் கல்லுாரி இவையும் வேண்டுமென்று 'தினமலர்' எழுதி வந்துள்ளது. இன்று அவை திருநெல்வேலியில் செயல்படுகின்றன என்றால் அதில், 'தினமலர்' இதழின் பங்கு பெரிய அளவில் உண்டு. கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க முயன்றது போல, திருநெல்வேலியிலும் ஒரு பல்கலைக் கழகத்திற்கான முயற்சிக்கும், 'தினமலர்' ஊக்கம் தந்தது.துாத்துக்குடிக்கு 1960ம் ஆண்டு ஜனவரியில் வந்த மத்திய தபால் தந்தித் துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்பாராயன், வ.உ.சி., கல்லுாரியில் பேசுகையில், 'துாத்துக்குடியில், கப்பல்துறை பொறியியல் கல்லுாரி' ஒன்று அமைப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். இதன் அவசியத்தை வலியுறுத்திப் பல தலையங்கங்களைத் 'தினமலர்' எழுதியும் உள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், மாணவர்கள் அதிக மார்க்குகள் பெறுவதற்காக, அதற்கான பாடங்களை பத்திரிகையில் துவங்கிய முதல் பெருமை, 'தினமலர்' இதழுக்குத் தான் உண்டு. அனுபவம் கொண்ட பல ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட்டு, பாடங்களை மிகவும் பயன் உள்ளதாக எழுதி, மாணவர்களுக்கு உதவி வருகிறது. பள்ளிகள் உருவாக்குவது மட்டுமல்ல, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் நிலையை உயர்த்துவதற்காக அவர்களை எல்லாம் ஓர் அமைப்பில் கொண்டு வரத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்க முயற்சிகள் நடைபெற்றன.


போற்றி பாராட்டுவோம்
அக்காலங்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய பல மாநாடுகளில் டி.வி.ஆர்., பங்கேற்று, ஆசிரியர்களை உற்சாகமூட்டி இருக்கிறார்.ஏழை எளியவர்கள் முன்னேற வேண்டுமானால் கல்விதான் அதற்கு சிறந்த வழி என்பதை உணர்ந்து, அதை மக்களுக்கு உணர்த்திய 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆரின்., 114வது பிறந்த நாளான இன்று, கல்வியில் முன்னேறி இன்று நாட்டிற்கும் வீட்டிற்கும் துாணாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பல லட்சக்கணக்கான மாணவ செல்வங்களின் சார்பில் போற்றி பாராட்டுவோம்!நன்றி: கடல் தாமரை 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நுால்

--- எல்.முருகராஜ் , பத்திரிகையாளர்..

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-அக்-202208:57:01 IST Report Abuse
Bhaskaran அய்யர் அவர்களின் பிறந்தநாள் முயற்சியாக ஒவொரு ஊரிலும் தினமலர் வாசகர் வட்டத்தை ஏற்படுத்தவேண்டும் அரசியல் கலப்பில்லாத இயக்கமாக சிறார்களுக்கு ஆன்மிகம் தேசப்பற்று பெரியோர்களுக்கு மரியாதை தருதல் மரம் நடுதல் தீவிரவாத எதிர்ப்பு ஏழைகளுக்கு இலவச திருமணம் .கல்வி உதவி போன்றவற்றை செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் கண்டிப்பாக அனைவரும் நன்கொடைத்தருவார்கள் .பகுத்தறிவு என்ற பெயரில் ரவுடித்ததானத்தை புகுத்தும் அல்லக்கை அரசியல் வாதிகளுக்கு இந்த இயக்கம் ஒரு சிம்ம சொப்பனம் ஆக இருக்கவேண்டும்
Rate this:
Cancel
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202201:24:16 IST Report Abuse
nisar ahmad நல்ல நோக்கத்திக்காக நல்ல மனிதரால் நடுநிலையான செய்திகளுன் ஆரம்பிகௌகப்பட்ட. நாழிதல்
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). மனமார வாழ்த்துக்கள்.2).தங்களை உதரணமாக கொண்டு நாங்களும் சேவை ஆற்றுவோம்.3). தங்களை போல் எல்லா தொழில் அதிபர்களும் முடிந்த அளவு தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்க உதவி புரிந்தால் அப்துல்கலாம் ஐயாவின் கனவை நிறைவேற்ற முடியும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X