பந்தலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை பகுதியில் இருவாச்சி பறவைகள் அதிகளவில் வலம் வந்து, பறவை ஆர்வலர்களை கவர்கின்றன.மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில், அரிய வகை இருவாச்சி பறவைகள் காணப்படுகின்றன. உலகம் முழுவதும், 54 வகை இருவாச்சி பறவைகள் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாத இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார் பாத இருவாச்சி ஆகிய 4 வகைகள் உள்ளன. தற்போது பந்தலுார் கிளன்ராக், முதுமலை புலிகள் காப்பக வனங்களில் மலபார் சாம்பல் நிற இருவாச்சி பறவைகளை காண முடிகிறது. பறவை ஆய்வாளர் சாலமோன் கூறுகையில், ''மரங்கள் அழிக்கப்படுவதால் இதுபோன்ற பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. இருவாச்சி பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகளால் வன வளம் அதிகரிக்கிறது. இயற்கையை பாதுகாப்பதால், இந்த பறவை இனங்களையும் பாதுகாக்க முடியும்,'' என்றார்.